மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30 பேருக்கு நேற்று சஷ்டியப்த பூர்த்தி நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் ராம ஐயங்கார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1977-78-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி முடித்த முன்னாள் மாணவர்கள், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து, 2003-ம் ஆண்டு வெள்ளி விழா மாணவர் பேரமைப்பு என்ற அமைப்பை உருவாக்கினர். இவர்கள் ஆண்டுக்கொரு முறை கூடி நினைவுகளை பகிர்ந்து கொள்வதுடன், தாங்கள் படித்த பள்ளிக்கும், அங்கு பயிலும் மாணவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிவிழா மாணவர் பேரமைப்பில் உள்ள 30 பேருக்கு 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து, மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நேற்று 30 தம்பதியருக்கும் சஷ்டியப்த பூர்த்தி விழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் கோ பூஜை, கஜ பூஜை செய்த பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் 160 கலசங்கள் வைத்து, 10 யாக குண்டங்கள் அமைத்து, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அவர்களுக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு, மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதல், ஆயுஷ் ஹோமம் நடத்தி வைக்கப்பட்டது.