கும்பகோணம்: ஆறுபடை வீடுகளுள் 4-ம் படை வீடான கும்பகோணம் வட்டம் சுவாமிமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் வள்ளி திருமணம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு இவ்விழா நேற்று முன்தினம் அனுஞ்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் மற்றும் பரிவார தெய்வங்கள் உற்சவ மண்டபம் எழுந்தருளலும், அதன்பிறகு, திருவலஞ்சுழி கோயிலில் தினைபுனை காட்சிக்காக செல்லுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
தினைபுனை சாகுபடியைக் காவல் காக்கும் வள்ளியை, முருகன் திருமணம் செய்வதற்கு ஆசை கொண்டார். அதற்காக தனது அண்ணன் விநாயகரின் உதவியை நாடினார். விநாயகரும், யானை உருவம் கொண்டு வள்ளியை விரட்டினார். இதையறிந்த வள்ளி பயந்து, முருகனிடம் தஞ்சம் புகுந்த நிகழ்வுநேற்று அதிகாலை அரசலாற்றில் தத்ரூபமாக நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, அலவந்திபுரம் நடுத்தெருவிலிருந்து நம்பிராஜன் அளித்த சீருடன் வள்ளிநாயகி-சண்முகர் திருமணம் நடந்தது. விழா ஏற்பாடுகளை அறநிலைய துறை துணை ஆணையர் தா.உமாதேவி, பணியாளர்கள் செய்து வருகின்றனர்.