ஆன்மிகம்

கும்பகோணம் | திருவலஞ்சுழியில் ‘விநாயகர் யானையாக மாறி வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி’ கோலாகலம்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், திருவலஞ்சுழியில் வள்ளியை முருகன் திருமணம் செய்வதற்காக, விநாயகர் உதவிசெய்யும் பொருட்டு யானை உருவமாக மாறி, வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.

ஆறுபடை வீடுகளுள் 4-ம் படை வீடான இக்கோயிலில் ஆண்டுதோறும் வள்ளி திருமணம் நிகழ்ச்சி வைபவம் நடைபெறுவது வழக்கம். நேற்று அனுஞ்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சண்முகர், வேடமூர்த்தி, நந்தமோகினி உள்படப் பரிவார தெய்வங்களின் உற்சவ மண்டபம் எழுந்தருளலும், தொடர்ந்து வள்ளிநாயகி மற்றும் வேடமூர்த்தி ஆகியோர் திருவலஞ்சுழி கோயிலில் தினைபுனை காட்சிக்காகவும் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் அரசலாற்றில், வள்ளியை, முருகப்பெருமான் திருமணம் செய்வதற்காக, தனது அண்ணனான விநாயகரிடம் உதவி கேட்டதால், தினைபுனை வயலைக் காவல் காக்கும் வள்ளியை, யானை உருவம் கொண்டு விநாயகர், விரட்ட, வள்ளி பயத்துடன் சுற்றி சுற்றி ஒடுவதும், பின்னர் முருகன் பெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது.


தொடர்ந்து, இன்று அலவந்திபுரம் நடுத்தெருவிலிருந்து நம்பிராஜன் சீர் கொண்டு வருதலும், இரவு 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் வள்ளிநாயகி-சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 9-ம் மற்றும் 10-ம் தேதியில் ஊஞ்சல் உற்சவமும், 11-ம் தேதி வள்ளி-தெய்வானையுடன் சண்முகர் திருக்கல்யாணமும், 12-ம் தேதி 108 சங்காபிஷேகமும், இரவு யதாஸ்தானம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை துணை ஆணையர் தா.உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT