திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா மார்ச் 28-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் - ரங்கநாச்சியார் தாயாருடன் சேர்த்தி சேவை கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் (கோ ரதம்) நேற்று நடைபெற்றது. இதையொட்டி, தாயார் சன்னதியில் சேர்த்தி உற்சவத்தில் இருந்த நம்பெருமாள் நேற்று காலை 9 மணிக்குபச்சை சாதரா பட்டு உடுத்தி, முத்துவளையக் கொண்டை, கஸ்தூரி திலகம், நீலமணிநாயகம், ரத்தின அபயஹஸ்தம் உட்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்துதேருக்கு புறப்பட்டார்.
சித்திரை வீதியின் வடகிழக்கு மூலையில் இருந்த தேரில் காலை 10 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து 10.45 மணிக்கு ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் கோயிலின் சித்திரை வீதிகளில் வலம் வந்து பிற்பகல் 3.15 மணியளவில் நிலையை அடைந்தது.
தேர்த் திருவிழாவையொட்டி ஏராளமான போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (ஏப்.7) ஆளும்பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் உலா வருவார். இத்துடன் பங்குனி தேர்த் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.