ஆன்மிகம்

சிறப்பாக வழிபாடு நடத்த கண்ணகி கோயிலுக்குச் செல்லும் தமிழக வனப்பாதையை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

என்.கணேஷ்ராஜ்

கூடலூர்: கண்ணகி கோயிலுக்குச் செல்லும் தமிழக வனப்பாதையை சீரமைத்து, வாகனம் செல்லும் வகையில் அகலப் படுத்தினால்தான் சிதில மடைந்த கோயிலை புனரமைத்து, சிறப்பாக வழிபாடு நடத்த முடியும். எனவே, அரசு நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையான கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையில் விண்ணேற்றிப்பாறையில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. சேரன் செங்குட்டுவனால் எழுப்பப்பட்ட இந்த கோயிலை, பின்னர் பாண்டிய மன்னர்கள் புதுப்பித்தனர்.

இந்தக் கோயிலுக்கு, கூடலூர் அருகே பளியன்குடியில் இருந்துமலைப்பாதை வழியே 6.6 கி.மீ.தொலைவு நடந்து செல்ல வேண்டும். மேலும், கேரள பகுதியான தேக்கடி, கொக்கரக்கண்டம் வழியே 13 கி.மீ. தொலைவு ஜீப் மூலமும் செல்லலாம்.

ஆண்டுதோறும் இக்கோயில் திருவிழா சித்திரை மாத பவுர்ணமி அன்று நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. கோயில் தமிழகப் பகுதியிலும், அதற்கான வாகனப் பாதை கேரள வனப்பகுதியிலும் அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

ஒரு வார காலம் நடைபெற்ற திருவிழா, படிப்படியாக குறைந்து ஒருநாள் திருவிழாவாக மாறிவிட்டது. தற்போது மாலை 6 மணி வரை நடைபெற்ற திருவிழா, கடந்த ஆண்டு பிற்பகல் 3 மணியுடன் நிறைவுபெற்றது. எனவே, பளியன்குடி மலைப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்த முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம், தேனியில் ஆட்சியர் ஆர்வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. அதில், மாலை 6 மணி வரை வழிபட அனுமதிக்க வேண்டும். தேனி மாவட்டத்திலிருந்து பளியன்குடி, குமுளி பகுதிக்கு அரசுப் பேருந்துகளை அதிகளவில் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை பொருளாளர் முருகன் கூறுகையில், கண்ணகி கோயில் தமிழகப் பகுதியில் இருந்தாலும், வாகனம் மூலம் அங்கு செல்வதற்கான பாதை கேரளப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால், அம்மாநில அரசு தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்து, அதீத ஆளுமை செலுத்தி வருகிறது.

தமிழகப் பகுதியில் வாகனம் மூலம் இக்கோயிலுக்குச் செல்லும் வசதி இருந்தால், இதுபோன்ற பிரச்சினை இருக்காது. இதன்மூலம், சிதிலமடைந்த கோயிலை எளிதில் புதுப்பிக்க முடியும். மேலும், ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் வழிபட முடியும். இதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT