தருமபுரி அடுத்த அன்னசாகரத்தில் உள்ள சிவசுப்பிரமணியர் கோயிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
ஆன்மிகம்

அன்னசாகரம் சிவசுப்பிரமணியர் கோயிலில் தேரோட்டம்: மகளிர் மட்டுமே வடம் பிடித்து நிலைபெயர்த்தனர்

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி அடுத்த அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் நேற்று நடந்தது. தருமபுரி அடுத்த அன்னசாகரத்தில் உள்ள சிவசுப்பிரமணியர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

நடப்பு ஆண்டுக்கான தேர்த் திருவிழா மார்ச் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக பூஜைகள், சிறப்பு வாகன உற்சவம் நடத்தப்பட்டு வந்தது. மேலும், பால்குட ஊர்வலம், திருக்கல்யாண உற்சவம், தோரணவாயில் ஊஞ்சல் சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

அதேபோல, விநாயகர் தே ரோட்டம், யானை வாகன உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வழி பாடுகள் நடத்தப்பட்டன. பின்னர் தேர்நிலை பெயர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

வழக்கமாக கோயில் தேரோட்டத்தின்போது தேரை நிலை பெயர்க்கும் உரிமை மகளிருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்து நிலை பெயர்த்தனர். அதன்பின்னர், மாலையில், அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி வந்தது. தேரோட்டத்தையொட்டி விழாக்குழு சார்பில் கோயில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிவசுப்பிரமணியர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இன்று (5-ம் தேதி) வேடர்பறி உற்சவம், நாளை (6-ம் தேதி) கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. 7-ம் தேதி சயன உற்சவம், 8-ம் தேதி விடையாற்றிஉற்சவ நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT