கும்பகோணம்:கும்பகோணம் கோட்டத்திலுள்ள 3 கோயில்களில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தையொட்டி தீர்த்தவாரியும், கோடீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்திலுள்ள நாகேஸ்வரர் மற்றும் ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோயிலில்களில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தையொட்டி கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இக்கோயில்களில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி திருக்கல்யாணமும், 3-ம் தேதி திருத்தேரோட்டமும், பங்குனி உத்திர தினத்தில் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. குளத்தின் கரையில் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரர் மற்றும் ஆனந்தியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதர் சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அஸ்ரத் தேவருக்கு 21 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதேபோல் சக்கராப்பள்ளி சக்கரவாகீஸ்வரர் கோயிலில் சப்தஸ்தான பெருவிழாவையொட்டி கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து , 3-ம் தேதி தேரோட்டமும், பங்குனி உத்திரமான தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது தேவநாயகி சமேத சக்கரவாகீஸ்வரர் சுவாமிகள் பக்தர்களுக்கு சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தனர். தொடர்ந்து அஸ்ரத் தேவருக்கு 21 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் குளத்தில் புனித நீராடினர்.
இக்கோயிலில் வரும் 7-ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேவநாயகி சமேத சக்கரவாகேஸ்வரர் சுவாமிகள் அழகுமிகு கண்ணாடி பல்லக்கில் சப்தஸ்தான உலா புறப்பாடும், 8-ம் தேதி நாச்சியம்மன் கோயில் வாசல் முன்பு பல்லக்கில் பூ போடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து ஆரூர் பல்லக்கும் இக்கோயிலுக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.
கும்பகோணம் கோடீஸ்வரர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை யொட்டி கடந்த 27-ம் தேதி கொடியேற்றமும், தேரோட்டமும் நடைபெற்றது. தேரில் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரர் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கோடீஸ்வரா கோடீஸ்வரா என் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இன்று தீர்த்தவாரியும், 6-ம் தேதி திருக்கோயிலுக்குள் 6 முறையும், வீதியில் 1 முறை வீதியுலா வருதலும், 7-ம் தேதி விடையாற்றியை யொட்டி புஷ்ப பலக்கும் வீதியுலா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.