நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி மற்றும் பவனி நேற்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலத்தின்போது, ஒலிவமலையில் இருந்து ஜெருசலேம் நகருக்குள் வந்த இயேசு கிறிஸ்துவை, குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் வரவேற்றதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு தவக்காலம் பிப்.22-ம்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறையொட்டி திருப்பலி, பவனி ஆகியவை நடைபெற்றன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை ஞாயிறு சிறப்புத் திருப்பலி நேற்று நடைபெற்றது. பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் அடிகளார், துணை பங்குத்தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
அதன்பிறகு பேராலயத்தை சுற்றி நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில், ஆயிரக்கணக்கானோர் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி கீர்த்தனைகளைப் பாடியவாறு ஊர்வலமாக சென்றனர். அதைத்தொடர்ந்து, வேளாங்கண்ணி பேராலய கலையரங்கத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.