ஆன்மிகம்

விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா - ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக் கணக்காண பக்தர்கள் பொங்கலிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயிலில் கடந்த 26ம் தேதி இரவு பங்குனிப் பொங்கல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், சிறுவர், சிறுமியர் இரவு பகலாக கொடி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி குளிர்வித்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, பங்குனிப் பொங்கல் விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன்று அதிகாலை ஸ்ரீ பராசக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கோயில் எதிரே உள்ள திடலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பலர் உடலில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வந்தும், பொம்மைகள் வைத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கோயிலுக்குள்ளும், வெளிபுறத்திலும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருட்டு, வழிப்பறி போன்ற அசம்பாவிதங்களைத் தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து கைதுசெய்யவும் பெண் போலீஸார் மற்றும் குற்றப் பிரிவு போலீஸார் சாதரண உடையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கோயிலின் உள்ளேயும், கோயிலைச் சுற்றிலும், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதியிலும் 10-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேரமராக்கள் பொருத்தப்பட்டன.

அதோடு, கே.வி.எஸ். நடுநிலைப் பள்ளி மைதானம், ஹாஜிபி பள்ளி மைதானம் மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள மைதானங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, நாளை (3ம் தேதி) கயிறு குத்து, அக்கினிச் சட்டியும், 4ம் தேதி தேரோட்டமும் நடைபெற இருக்கிறது. விழா நடைபெறும் நாள்களில் தினந்தோறும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் வீதி உலாவும் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT