சென்னை: திருவிடைமருதூர் வட்டம், திருபுவனத்திலுள்ள தர்மசம்வர்த்தினி சமேத கம்பஹரேஸ்வரர் கோயிலில் ரூ.4 கோடி மதிப்பில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயத் திருப்பணி தொடங்கப்பட்டது.
இக்கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமபுர ஆதினத்திற்குச் சொந்தமான இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகளுக்கு மேலானதையொட்டி இக்கோயிலில் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை திருப்பணி தொடங்குவதற்கான பாலாலயம் நடைபெற்றது. நேற்றும், இன்றும் 2 கால யாக சாலை பூஜைகள், திருமுறைப் பாராயணம் நடைபெற்று, ராஜகோபுரம், கொடிமரம், கட்டை கோபுரம், சோமாஸ்கந்தர் ஆகிய 4 இடங்களில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து உற்சவ மண்டபத்தின் முன்பு நவக்கிரஹ பூஜைகள் செய்து பாலாயத்திற்கான திருப்பணியை தருமபுரம் ஆதீன 27-வது குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தொடங்கி வைத்தார். அவருடன் கோயில் மேலாளர் டி.கந்தசாமி, கண்காணிப்பாளர் எஸ்.ரங்கராஜன் மற்றும் உபயதாரர்கள் பங்கேற்றனர். இதேபோல் இக்கோயிலை சேர்ந்த எல்லை பிடாரி, அய்யனார்,காத்தாயி அம்மன் ஆகிய 3 கோயில்களிலும் பாலாலயம் திருப்பணி நடைபெற்றது.