முருகனுக்கு மிகச் சிறப்பாக நடத்தப்படும் அபிஷேகங்களில் முதன்மையானது ஜேஷ்டா அபிஷேகம். இது ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அதாவது வடமொழியில் ஜேஷ்டா என அழைக்கப்படும் கேட்டை நட்சத்திரத்தில் இந்த அபிஷேகம் நடப்பதால் இதற்கு ஜேஷ்டாபிஷேகம் என்ற சிறப்புப் பெயர் உண்டு. உலக மக்களின் நன்மைக்காக நடத்தப்படும் இந்த அபிஷேகம் பஞ்சாமிருதத்திற்குப் பெயர் பெற்ற பழநியில் இம்மாதம் 10-ம் தேதி நடைபெறவுள்ள இந்தச் சமயத்தில் அவனருளால் அவன் தாள் பற்றி அவனை அறிவோம்.
பழநி திருமுருகா பரமேஸ்வரன் மைந்தா
பாகேஸ்வரி ஈன்ற பைந்தமிழ் புதல்வா - நீ
நினைத்தால் என்னை வாழ வைக்க
நேரமும் காலமும் வேண்டுமோ
என்ற பாகேஸ்வரி ராகப் பாடல் முருகன் துரிதமாக வேண்டுவனவற்றை அருளுபவன் என்பதைக் குறிக்கிறது என்றே கூறலாம். இம்முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடே பழநி. இங்குள்ள மூலவர் நவ பாஷாணத்தால் ஆனவர். நவ என்றால் ஓன்பது என்பதால், ஒன்பது வகை மூலிகைகளைக் கொண்டு சித்தர் திலகம் போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது இச்சிலா ரூபம்.
பழநி முருகன் இங்கு குடி கொண்டதற்கான புராணக் கதை ஒன்று உண்டு. உலகை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே பரிசாக அதிசய மாம்பழம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து விநாயகரும், முருகனும் போட்டிக்குத் தயாராகிறார்கள். அன்னை, அப்பனைச் சுற்றி வந்து பரிசை விநாயகர் பெற்றுவிட, கோபத்தில் முருகன் பழநி ஆண்டியானார் என்பதுதான் அனைவரும் அறிந்த அந்தப் புராணக் கதை.
ஓளவை பிராட்டி, கோபமுற்ற இப்பழநி முருகனின் மனம் மாற தன்னிடம் முருகன் மிகுந்த அன்பு கொண்டிருந்ததினால் தனக்குப் பசிக்கிறது என்று சொல்லி அழைக்கிறாள். உடனே நாவல் மர உச்சியில் அப்போது இருந்த முருகன், சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்க தமிழ் புலவரான ஓளவைக்கே ஆச்சரியம் தமிழ்க் கடவுளான முருகனின் சாதுர்யம் கண்டு.
மரத்தை உலுக்கும் பொழுது நாவல் பழம் கனிந்த பழமாக இருந்தால், விழுந்தவுடன் மண் ஓட்டிக் கொள்ளும். அப்போது மண் போக ஊதித் தான் உண்ண வேண்டும். சூடாக இருந்தால்தானே ஊதி ஊதி உண்போம். எனவே அது சுட்ட பழம். பழத்தை மரத்திலிருந்து பறித்துப் போட்டால், அது விண்ணென்று இருப்பதால் மண் ஓட்டாது. எனவே ஊத வேண்டிய அவசியமும் இல்லை. இதுவே சுடாத பழம் என்று முருகன் கோபத்திலும் விளக்கமளிப்பதைக் கண்ட ஓளவை, பழம் நீயப்பா, ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞான பழம் நீயப்பா என்ற பொருளில் முருகனை வாழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது. இப்படி போற்றிக் கொண்டாடப்படும் பழநி முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் தொன்றுதொட்டு காணப்படுகிறது.
இப்பழநி மலையை கிரி வலம் வந்த பின் படியேறி முருகனைத் தரிசிக்கும் பழக்கமும் உண்டு. யானைப் பாதை என்ற படியில்லாத பாதையும் உண்டு. இதே பழநிக்கு திருஆவினன்குடி என்ற புராணப் பெயரும் உண்டு. இப்பெயருக்கான விளக்கமாகத் தெரிவிக்கப்படும் பொருள் திரு - மஹாலஷ்மி, ஆவி - கோமாதா, இனன் - சூரியன், கு - பூமாதேவி, டி - அக்னி ஆகியோர் வழிபட்ட தலம் என்ற ஐதீகமும் உண்டு.
பழநி மலையில் முருகன் கோயில் கொண்டிருக்கும் கருவறையில், பெட்டியொன்றில் ஸ்படிக லிங்கமாகப் பார்வதி பரமேஸ்வரன் இருப்பதாகவும், இத்திருவுருவங்களை முருகன் தினமும் பூஜிப்பதாகவும் கூறப்படுகிறது. இக்கோயிலின் தல விருட்சம் நெல்லி மரம். மதுரையில் மீனாட்சிக்குக் கையில் கிளி, பழநி முருகனுக்கோ கையில் உள்ள தண்டத்தில் கிளி. இக்கிளியே அருணகிரிநாதர் என்பார்கள்.
பிரபலமான பஞ்சாமிர்தம் என்றாலே பழநி மட்டும்தான்.