கும்பகோணம்: மாசி மகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோயில்களில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்கள், 5 பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது மாசி மகமாகவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது மகாமக பெருவிழாவாகவும் குறிப்பிடப்படுகிறது. நிகழாண்டு மாசிமக விழாவை ஒட்டி கும்பகோணம் சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக பெருமாள் உள்ளிட்ட 3 கோயில்களில் கடந்த 26-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
நேற்று வரை பல்வேறு வாகனங்களில் தாயாருடன் பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. முக்கிய விழாவான மாசி மகத்தையொட்டி இன்று காலை 9 மணி அளவில் சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக பெருமாள் கோயில்களில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் சக்கரராஜா சக்கரராஜா என தேரின் வடம் பிடித்து இழுத்தனர். கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், மயிலாடுதுறை இணை ஆணையர் சு. மோகனசுந்தரம், மாநகர துணை மேயர் சு.ப. தமிழழகன்,கோயில் செயல் அலுவலர் ச.சிவசங்கரி உள்பட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். காவல் ஆய்வாளர்கள் அழகேசன் மற்றும் சிவ. செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.