ஆன்மிகம்

மாசிமக விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நாளை தீர்த்தவாரி

செய்திப்பிரிவு

கும்பகோணம்: மாசிமக விழாவையொட்டி கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

கும்பகோணத்தில் 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும், ஆண்டுதோறும் மாசிமக விழாவும் நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு மாசிமக விழா 6 சிவன்கோயில்களில் கடந்த 25-ம் தேதியும், 3 பெருமாள் கோயில்களில் கடந்த 26-ம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை விநாயகர், முருகன் தேரோட்டமும், தொடர்ந்து ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன் தேரோட்டமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இதில், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், அறநிலையத் துறைஇணை ஆணையர் சு.மோகனசுந்தரம், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், கோயில் செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று (மார்ச் 5) சண்டிகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், சோமேஸ்வரர் தேரோட்டம் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான மாசிமக தீர்த்தவாரி நாளை (மார்ச் 6) மகாமக குளத்தில் நடைபெறுகிறது. மேலும், சக்கரபாணி, ராஜகோபால சுவாமி, ஆதிவராகப் பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களின் தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. பின்னர், சாரங்கபாணி கோயில் பொற்றாமரைக் குளத்தில் தெப்போற்சவம் நடைபெறும்.

SCROLL FOR NEXT