ஆன்மிகம்

இந்திய - இலங்கை பக்தர்கள் கலந்து கொண்ட கச்சத்தீவு ஆலய திருவிழா கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: இந்திய - இலங்கை பக்தர்கள் கலந்து கொண்ட கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கூட்டுத் திருப்பலி, கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.

இந்திய - இலங்கை நாட்டு பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்க ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 12 நாட்டுப் படகுகளில் 2,408 பேர் சென்றனர். இலங்கையிலிருந்து 3,824 பேர் வந்தனர்.

நெடுந்தீவு பங்குத்தந்தை வசந்தன் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து திருச் ஜெபமாலை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை நடைபெற்றன. அன்றிரவு புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர், ஆலயத்தை வலம் வந்தது.

இந்நிகழ்வுகளில் இரு நாடுகளிலிருந்தும் வந்திருந்த பங்குத்தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை புனித அந்தோணியர் ஆலயத்தில் முக்கிய நிகழ்வான கூட்டுத் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றன. இதில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம், யாழ்ப்பாண குரு முதல்வர் ஜெபரெத்தினம்,

நெடுந்தீவு பங்குத்தந்தை வசந்தன், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை தேவசகாயம், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரி ராகேஷ் நடராஜ் மற்றும் சிவகங்கை மறைமாவட் டத்தைச் சேர்ந்த பங்குத்தந்தைகள், அருட்சகோதரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பின்னர் விழாவின் நிறைவாக கொடியிறக்கம் செய்யப்பட்டது. அதனையடுத்து காலை 11 மணி முதல் இந்திய, இலங்கை பக்தர்கள் கச்சத்தீவிலிருந்து படகுகள் மூலம் புறப்பட்டனர். நேற்று மதியம் 3 மணி முதல் மாலை 5 வரை இந்திய பக்தர்கள் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தனர்.

SCROLL FOR NEXT