ஆன்மிகம்

ஆதிக்ஷேத்திரம் ஆழ்வார் திருநகரி

பொற்செல்வி

தெ

ன் பாண்டி நாட்டில் திருச்செந்தூர் அருகே தாமிரபரணிக் கரையில் இருக்கும் ஆழ்வார்திருநகரி ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசத்தில் ஒன்றாகும். நம்மாழ்வார் அவதரித்த இத்தலம் நதிக்கரையில் இருக்கும் நவதிருப்பதிகளில் ஒன்றாக, வியாழனுக்குரிய தலமாக உள்ளது.

மூலவர் ஆதிநாதர். கிழக்குப் பார்த்து நின்ற திருக்கோலம். ஆதியிலே தோன்றியவர் என்பதால் இத்திருநாமம். முதன்முதலாகப் பெருமாள் வாசம் செய்த தலம் என்பதால் ஆதிக்ஷேத்திரம் ஆயிற்று.

இத்தலம் வராக க்ஷேத்திரமும் ஆகும். ஞானப்பிரான் சன்னிதி முதல் பிரகாரத்தில் உள்ளது. ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என்று இரு தாயார்கள் தனித் தனியான சன்னிதிகளில் பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் குடியிருக்கிறார்கள். அருகில் உள்ள நவதிருப்பதித் தலங்களிலும் அந்தந்த ஊர்ப் பெயர் கொண்ட நாச்சியார்கள் இருக்கிறார்கள்.

கருடன் இங்கு வழக்கமான கூப்பிய நிலையில் இல்லாமல் அபயஹஸ்தம், நாகர், சங்கு, சக்கரத்துடன் இருக்கிறார்.

நகரின் பழைய பெயர் திருக்குருகூர். நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் பல இறுதிப் பாசுரங்களில் ‘குறுகூர்ச் சடகோபன்’ என்றே தன் பெயரைக் குறிப்பிடுகிறார்.

திருமால் பிரம்மனுக்குக் குருவாக வந்ததால் திருக்குருகூர் என்ற பெயர் பெற்றது. இத்தலத்தின் இன்னொரு சிறப்பு திருப்புளியாழ்வார் என்றும், உறங்காப்புளி என்றும் அழைக்கப்படும் புளிய மரமாகும். இம்மரம் 5,000 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது. இதன் இலைகள் மற்ற புளிய மர இலைகளைப் போல் இரவில் மூடாது. இம்மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் பழுக்காது.

நம்மாழ்வார் பிறந்தவுடன் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தார். அவருடைய பெற்றோர் இத்தலத்துக்கு வந்து இறைவன் முன் அவரைத் தரையில் இட்டனர். உடனே அக்குழந்தை தவழ்ந்து சென்று அருகில் இருந்த இப்புளிய மரத்தின் பொந்தில் சென்று தியானத்தில் ஆழ்ந்தது.

16 ஆண்டுகளுக்குப் பின், அருகில் உள்ள திருக்கோளூரைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் வடதிசை சென்றபோது, தென்திசையில் தெரிந்த தெய்வீக ஒளியைப் பின்பற்றி வந்து நம்மாழ்வாரை அடைந்தார்.

புளியமரப் பொந்திலிருந்த பாலகனைப் பார்த்து அவர், “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எப்படி இருக்கும்?” என்று கேட்டார். அப்பாலகனும் கண் திறந்து, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று கூறினார். அவர் கேட்டது - சடப்பொருளான உடம்பில் உயிர் சேர்ந்தால் என்னவாகும் என்பதாகும். உடம்பையே தானாக நினைத்து அதில் உழன்று கொண்டிருக்கும் என்று நம்மாழ்வார் கூறியவுடன், அந்தப் பண்டிதர் அவரது காலில் விழுந்து, அவரது சீடனாகி, அவரை மட்டுமே பாடி, மதுரகவி ஆழ்வார் என்ற பெயருடன் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவருமானார்.

14chsrs_azhwar11right

ஆதிசேஷனே புளிய மரமாக வந்ததாகவும் கூறப்படுகிறது. ராமாவதாரத்தில் ராமர் இவ்வுலகை விட்டுச் செல்லும் இறுதி நேரத்தில் தனிமையில் இருக்க விரும்ப, இலக்குவன் காவலிருந்தான். அப்பொழுது வந்த துர்வாசரை ராமரைப் பார்க்க விடாமல் தடுக்க, அவர் புளிய மரமாகும் படி இலக்குவனைச் சபித்துவிடுகிறார்.

அதன்படி இலக்குவனாக வந்த ஆதிசேஷன் புளிய மரமாகித் திருக்குறுகூரில் நிற்க, பெருமாளே நம்மாழ்வாராக வந்து அதனடியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆகவே கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், இளையாழ்வார் என்பதைப் போல் ‘திருப்புளியாழ்வார்’ என்று வைணவ மக்களால் இந்தப் புளிய மரம் கொண்டாடப் படுகிறது.

இந்தப் புளியமரத்தின் அடியிலேயே நம்மாழ்வாருக்கு 36 திவ்ய தேசத்துப் பெருமாள்களும் வந்து காட்சி அளித்ததாகவும், இங்கிருந்தே அவர்களைப் பாடியதாகவும் கூறப் படுகிறது.

புளிய மரத்தின் அடியில் கட்டப்பட்டிருக்கும் சுவரின் நான்கு பக்கங்களிலும் 36 திவ்ய தேசப் பெருமாள்களின் சிற்பங்கள் உள்ளன. தூய்மையான, அமைதியான திருக்கோயிலில் அர்ச்சகர் பாசுரம் பாட, இறைவனை வணங்குவதே ஆனந்தமாக இருந்தது.

SCROLL FOR NEXT