ஆன்மிகம்

சித்திரா பவுர்ணமி: வளம் வேண்டும் திருவிழா

ஜி.விக்னேஷ்

சித்திரகுப்தர் அவதரித்த தினமாகக் கருதப்படும் சித்திரா பவுர்ணமி தினம் வளம்பெறுதலின் திருநாளாகக் கருதப்படுகிறது.

ஸ்ரீராமர், வனவாசம் முடிந்து சீதாதேவியுடன் நாடு திரும்பிய நாள் சித்திரா பவுர்ணமி என்கிறார்கள். சித்திரை மாதப் பவுர்ணமி யன்று வழக்கமான பவுர்ணமி நாட்களைவிடவும் நிலவு பெரிதாகத் தெரியும். அந்தச் சமயத்தில் கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளின் கரைகளில் குடும்பமாகச் சென்று நிலவொளியில் நனைந்தபடி சாப்பிடும் பழக்கம் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. சித்ரான்னம் என்று சொல்லப்படும் இந்த உணவில் பல வகையான சோறு தயார் செய்து கொண்டு நிலவொளியில் வைத்து உண்பதுண்டு.

சிலப்பதிகாரத்தின் ஐந்தாம் காதையான, `இந்திர விழா ஊரெடுத்த காதை’யில் இப்படிச் சாப்பிடுவதை இளங்கோ அடிகள் சுட்டிக்காட்டுகிறார். தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் பவுர்ணமியன்று இவ்விழா தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் நடைபெறுமாம். இதனைச் சோழ அரசரே ஏற்று நடத்துவார். சோழ அரசனான முசுகுந்த சோழனைக் காக்க இந்திரனால் அனுப்பப்பட்ட காப்பு தெய்வத்திற்கு முதல் பூஜை நடக்கும்.

அப்பொழுது மக்கள் தம் குடும்பத்தினருடன் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள். இந்நாளில் தேவர்கள் வானத்தில் இருந்து இவ்விழாவைக் காண வருவதால், அவர்களின் பார்வை தங்கள் மீது படிந்தால் புண்ணிய பலன் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை.

சிலப்பதிகாரத்தின் முக்கியக் கருத்துகளில் ஒன்று ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்பது. முற்பிறவியின் பாவ,புண்ணியங்களைக் கணக்கெடுத்து வைத்துக் கொள்ளும் பணியில் உள்ள சித்திரகுப்தனை மகிழ்விப் பதற்காகவே இந்திரவிழா சித்திரா பவுர்ணமியன்று தொடங்கப்படுகிறது. இவ்வழக்கப்படி இன்றும் தமிழகத்தில் சித்திரா பவுர்ணமியன்று மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

சித்ரகுப்தன் தோன்றிய வரலாறு

ஒரு முறை சிவபெருமான், பார்வதி தேவி வரைந்த அழகிய ஆண் குழந்தை ஓவியத்தைக் கண்டார். அதற்கு உயிர் கொடுத்து அழகு பார்த்தார். சித்திரமே புத்திர உருவெடுத்ததால், சித்திர புத்திரன் என்றும் சித்திரகுப்தன் என்றும் பெயர் வழங்கப்பட்டது அக்குழந்தைக்கு.

இறைவி, இறைவனால் நேரடியாக உருவாக்கப்பட்ட அக்குழந்தையின் அறிவு அபரிமிதமாக இருந்தது. அக்குழந்தை படைப்புத் தொழிலையே கைப்பற்றிக்கொண்டது. பிரம்மாவின் அவ்வேலையை அவருக்கே தந்துவிடுமாறு கூறினார் ஈசன். பின்னர் உலக உயிர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு, அதற்கேற்ப நீதி வழங்க உதவும் காலதேவனின் கணக்குப்பிள்ளையாகப் பதவி ஏற்கப் பணித்தாராம்.

சித்திரகுப்தருக்குத் தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் மட்டுமே தனிக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக் கோயிலில், சித்திரகுப்தர் அவதரித்த தினமாகக் கருதப்படும் சித்திரா பவுர்ணமி தினத்தன்று, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சித்திரா பவுர்ணமியன்று சித்திரகுப்தர் மற்றும் அவரது தேவியான சித்திரலேகாவுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அக்கோயிலில் உள்ள சித்திர குப்தருக்கு அன்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பின்னர் கல்யாண திருக்கோலத்தில் திருவீதியுலாவுடன் நிறைவுபெறும்.

SCROLL FOR NEXT