விழுப்புரம்: செஞ்சி அருகேயுள்ள மேல் மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற மாசி தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேர் இழுத்தனர்.
இக்கோயிலில் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிப் பெருவிழா தொடங்கியது. கடந்த 19-ம் தேதி மயானக் கொள்ளை, 22-ம் தேதி தீமிதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தொடர்ந்து, முக்கிய நிகழ்வான மாசித் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. நேற்று மதியம் மலர்களால் அலங்கரிப்பட்ட அங்காளம்மன், மேளதாளம் முழங்க திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து, தேர் இழுத்தனர்.
இதில், தமிழத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் வசதிக்காக அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், விழுப்புரம் எஸ்.பி. நாதா தலைமையில் 700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.