திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தர்கள் ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கி, கூடுதலாக விஐபி பிரேக் தரிசனத்திற்கு ரூ.500 டிக்கெட் பெற்று ஏழுமலையானை மிக அருகிலிருந்து தரிசித்து வருகின்றனர்.
இதற்காக தனி டிக்கெட் மையங்கள் ஏற்பாடு செய்யப் பட்டன. இதில் திருப்பதி மாதவம் தங்கும் விடுதியில் செயல்பட்டு வந்த மையம் கடந்த டிசம்பரில் மூடப்பட்டது. விமானம் மூலம் ரேணிகுண்டா வருவோருக்கு மட்டும் தினமும் 250 டிக்கெட் வழங்கப்பட்டது. மேலும் ஆன்லைனில் தினமும் 1,000 ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் விநியோகம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பக்தர்களின் விருப்பத்தின்பேரில் திருமலையில் உள்ள கோகுலம் தங்கும் விடுதியில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் விநியோகம் நேற்று தொடங்கியது. நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டும் தினமும் 150 டிக்கெட் வழங்கப்படும்.
மார்ச் 1-ம் தேதி முதல் திருமலையில் தினமும் 400 ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் வழங்கப்படும் டிக்கெட் இனி 100 ஆக
குறைக்கப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஏழுமலையானை வரும் மார்ச் மாதத்தில் தரிசனம் செய்ய, 65 வயது நிரம்பிய முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையத்தில் டோக்கன் வெளியாக உள்ளது.