ஆன்மிகம்

சென்னையில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்: கோயில்களில் விடிய விடிய சிறப்பு வழிபாடு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் விடிய விடிய விழித்திருந்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

சிவனுக்குரிய விரதங்களாக, மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி என ஆண்டு முழுவதும் பலசிவராத்திரிகள் உள்ளன. இதில்மகா சிவராத்திரி விரதம் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. ராத்திரி என்ற சொல்லுக்கு அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள்.

உயிர்கள் செயலற்று, ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. மகா சிவராத்திரி நாளில், 3-ம் காலத்தில் ஈசனை வழிபட்டால் பாவங்கள் நம்மை விட்டுவிலகும் என்பது நம்பிக்கை.

அந்த வகையில் நேற்று மகா சிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாக ராஜசுவாமி, வேளச்சேரி தண்டீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் நேற்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.

சிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் விளையாட்டு மைதானத்தில் சிவ தரிசனம், நாட்டிய சங்கம் என இன்று காலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளும், 4 கால பூஜைகள், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதேபோல், வடபழனி முருகன் கோயிலில் மகா சிவராத்திரி விழா நேற்று இரவு, முதல் கால பூஜையுடன் தொடங்கி, அதனை தொடர்ந்து ஒவ்வொரு 2 மணிநேரத்துக்கு ஒரு கால பூஜை என தொடர்ந்து 4 கால பூஜைகள், இசை நிகழ்ச்சிகள், பஜனைகளும் நடைபெற்றன.

SCROLL FOR NEXT