சிங்கப்பூர்: தமிழகத்தின் நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிங்கப்பூரில் குடியேறிய தமிழர்கள் கடந்த 1827-ம் ஆண்டில் அங்கு மாரியம்மன் கோயிலை கட்டினர்.
நாராயண பிள்ளை என்பவர் தலைமையில் உருவான இந்த கோயில் சிங்கப்பூரின் மிகக் பழமையான கோயில் ஆகும். கடந்த 1973-ம் ஆண்டில் இந்த கோயிலை தேசிய நினைவு சின்னமாக சிங்கப்பூர் அரசு அறிவித்தது.
மாரியம்மன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுழு குடமுழுக்கு நடத்தப்படுகிறது. இதற்காக ரூ.21.72 கோடி செலவில் கோயில் புனரமைக்கப்பட்டது. இதைடுத்து திட்டமிட்டபடி சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் துணை பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
பலத்த மழை பெய்தபோதும் 20,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குட முழுக்கில் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. ஏராளமானோர் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். சீனர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர் சவுத் பிரிட்ஜ் சாலையில் மாரியம்மன் கோயில் உள்ளது. நூற்றுக்கணக்கான சீனர்களும் கோயிலில் பக்தியோடு வழிபட்டனர். சீன வம்சாவளி பக்தர் ஜெய்டன் சூ கூறும்போது, “எங்களது குடும்பத்தோடு கோயில் குடமுழுக்கில் பங்கேற்றோம். இந்தியர்களின் பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது" என்று தெரிவித்தார்.