நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழா மார்ச் 5ம் தேதி தொடங்கும் நிலையில், கேரள பெண் பக்தர்கள் தற்போதே வரத் தொடங்கியுள்ளனர். குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாததால் அவர்கள் சிரமம் அடைகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலில் மாசிக் கொடை விழா வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. விழாவில் இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழாவில், தினமும் பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழிபாடு, பூஜைகள், சமய சொற்பொழிவு, சமய இன்னிசை விருந்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
14-ம் தேதி ஒடுக்கு பூஜை: கொடை விழாவில் 6-ம் நாளான மார்ச் 10-ம் தேதி வலியப்படுக்கையும், 14-ம் தேதி மகா ஒடுக்கு பூஜை'யும் நடைபெறும். மார்ச் 21-ம் தேதி எட்டாம் கொடை விழாவும், 25-ம் தேதி மீன பரணிக்கொடை விழாவும் நடைபெற உள்ளது. மண்டைக்காடு கோயில் திருவிழா தொடங்கவுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக கேரளாவில் இருந்து திரளான பெண் பக்தர்கள் மண்டைக்காடு கோயிலுக்கு இருமுடி சுமந்து வந்தும், பொங்காலையிட்டும் நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
பக்தர்கள் சிரமம்: அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் இதுவரை மேற் கொள்ளப் படாததால் சுட்டெரிக்கும் வெயிலில் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, அடிப்படை வசதிகளை தாமதமின்றி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.