கடலூர்: வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த ஆண்டு 152-ம் ஆண்டு தைப்பூச விழாவையொட்டி கடந்த 4-ம் தேதி காலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் மற்றும் தரும சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் சத்திய ஞானசபையில் காலை 10 மணிக்கு கொடி ஏற்றம் நடைபெற்றது. இரவு தரும சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அப்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன் “அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி” என்று முழங்கினர்.
தொடர்ந்து காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, இன்று (பிப்.6) காலை 5.30 மணிக்கும் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலம், தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வந்து ஜோதி தரிசனத்தை கண்டுகளித்தனர்.
அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம், எஸ்.பி. சக்திகணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள், வடலூர் நகராட்சித் தலைவர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வள்ளலார் சித்திபெற்ற திருவறை தரிசனம் நாளை (பிப்.7) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடைபெற உள்ளது. அப்போது வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருவறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றன. வடலூரில் திரும்பிய திசை எல்லாம் அன்னதானம் வழங்கப்பட்டது.