கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத்தையொட்டி நேற்று முன்தினம் காலை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்வும், தேரோட்டமும் நடைபெற்றது.
நேற்று தைப்பூசத்தையொட்டி கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக மருதமலைக்கு வந்தனர். அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.
பாதயாத்திரையாக வந்த முருக பக்தர்கள், பொதுமக்கள் மலை படிக்கட்டுகள் வழியாக, மலைக்கோயிலுக்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குட ஊர்வலமாகவும் கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அப்போது ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என பக்தர்கள் விண்ணதிர முழக்கமிட்டனர்.
இதேபோல, அன்னூர் குமரன்குன்று சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் அழைத்தலும், சுப்பிரமணிய சுவாமிக்கு ஆடை மற்றும் மாலை வழங்குதல், அபிஷேக பூஜையும் நடந்தது.
நேற்று தேரோட்டம் நடைபெற்றது. கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோயிலில் இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 4-ம் தேதி மாலை வள்ளியம்மை திருக்கல்யாணமும், இரவில் யானை வாகன காட்சி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
மாலையில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று பரிவேட்டை நிகழ்ச்சியும், நாளை ஒயிலாட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது.