புதுக்கோட்டை வெள்ளாற்றங்கரையில் நேற்று நடைபெற்ற 6 கோயில் சுவாமிகளின் தைப்பூச தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்றோர். 
ஆன்மிகம்

புதுக்கோட்டை வெள்ளாற்றில் 6 கோயில் சுவாமிகளின் தைப்பூச தீர்த்தவாரி உற்சவம்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை / கரூர் / பெரம்பலூர் / அரியலூர்: தைப் பூசத்தையொட்டி, புதுக்கோட்டையில் உள்ள வெள்ளாற்றில் நேற்று 6 கோயில் சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

தை மாதம் பூச நட்சத்திரத்தில் சிவனும், பார்வதியும் நதியில் நீராடியதைப் போற்றும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள வெள்ளாற்றங்கரைக்கு திருவேங்கைவாசல் பிரகதாம்பாள் உடனுறை வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் இருந்து சுவாமியும், அம்மனும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டனர்.

இதேபோல, புதுக்கோட்டை பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர், வேதநாயகி உடனுறை சாந்தநாதர், கோட்டூர் மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர், திருமயம் வேணுவனேஸ்வரி சமேத சத்தியகிரீஸ்வரர் மற்றும் விராச்சிலை சவுந்தரநாயகி உடனுறை வில்வவனேஸ்வரர் ஆகிய சுவாமிகள் ஊர்வலமாக வெள்ளாற்றங்கரைக்கு கொண்டுவரப்பட்டனர்.

பின்னர், வெள்ளாற்றங்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, ஆற்றில் தீர்த்தமாடினர். இதேபோல, பனையப்பட்டி, குமரமலை, நகரம், விராலிமலை, ஏ.மாத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

குளித்தலையில்...: கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில், 8 ஊர் கோயில்களின் சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி, தீர்த்தவாரி ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, நேற்று சுவாமிகள் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு, வெண்ணெய்மலை, புகழிமலை, பாலமலை பாலசுப்பிரமணி கோயில்கள், கிருஷ்ணராயபுரம் தண்டாயுதபாணி, செல்லாண்டிபட்டி விநாயகர் கோயில், தனசியப்பன் கோயில் தெரு செந்தூர் ஆண்டவர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நேற்று நடைபெற்றன.

தைப்பூசத்தை முன்னிட்டு, பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. ரங்கநாதபுரத்தில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு இட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். மருவத்தூரில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பால்குடம் எடுத்துவந்து பூஜை செய்து வழிபட்டனர்.

பூலாம்பாடி செல்வ மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் சுவாமிக்கு பால் குடம் எடுத்து, அலகுக் குத்தி, அக்னி சட்டி ஏந்தி வலம் வந்து நேர்த்திக் கடனை செலுத்தி சுவாமியை வழிபட்டனர். தைப்பூசத்தை முன்னிட்டு, அரியலூரை அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள 23 அடி உயர பாலமுருகனுக்கு பக்தர்கள் நேற்று பால் காவடி, பால் குடம் எடுத்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

தொடர்ந்து, முருகனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல, கல்லங்குறிச்சியில் உள்ள குறைதீர்க்கும் முருகன் கோயில், அரியலூர் சுப்பிரமணிய சுவாமி, திருமானூர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஜெயங்கொண்டம் முருகன் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

SCROLL FOR NEXT