மதுரை: மதுரையில் தை தெப்பத் திருவிழாவை யொட்டி மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தைத் தெப்பத்திருவிழா ஜன.24-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்மன் காலை, மாலையில் புறப்பாடாகி அருள் பாலித்தனர். அதைத் தொடர்ந்து 12-ம்நாளான நேற்று (பிப்.04) தெப்பத் திருவிழாவையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் அதிகாலை 5 மணியளவில் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலிலிருந்து வெள்ளி சிம்மாசனத்தில் பிரியாவிடை யுடன் சுந்தரேசுவரர், வெள்ளி அவுதா தொட்டிலில் மீனாட்சி அம்ம னும் புறப்பாடாகினர். சித்திரை வீதிகள், காமராசர் சாலை வழியாக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் முன்புள்ள மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்குள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக் கப்பட்டிருந்த தெப்பத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். பக்தர்கள் வடம்பிடிக்க தெப்பத்தை 2 முறை சுற்றி வலம் வந்து அருள்பாலித்தனர். மாலையில் தெப்பக்குள மைய மண்டபத்தில் எழுந்தருளி பத்தி உலாத்துதல், தீபாராதனை நடந்தது. இரவில் மீண்டும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர்.
வெள்ளி அவுதா தொட்டிலில் மீனாட்சி அம்மனும், தங்கக் குதிரை வாகனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரரும் எழுந்தருளினர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தைச் சுற்றி லும் நின்று தரிசனம் செய்தனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்காக நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இரவில் தெப்பத்திருவிழா முடிந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் காமராசர் சாலை வழியாக அம்மன் சந்நிதி வழியே கோயிலை அடைந்தனர். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், துணை ஆணையர் ஆ.அருணாசலம் தலைமை யில் பணியாளர்கள் செய்திருந்தனர்.