கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலத்தில் ஆண்டுதோறும் தை மாத கடைசி செவ்வாய்க்கிழமை ஆண்டுப் பெருவிழா நடைபெறும்.
இந்தாண்டு இப்பெருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் கொடி மந்திரிக்கப்பட்டது. பின்னர் கொடி பவனியாக கொண்டு வரப்பட்டு கொடி மரத்தில் 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி, மறையுரை, செபமாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொடியேற்று விழாவில், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ., எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மற்றும் பாளையங்கோட்டை மறை மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பங்கு தந்தையர்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மணியாச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், இரவு நற்கருணை ஆசீரும் நடைபெறுகின்றன. பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 5-ம் தேதி மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஏ.ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து நற்கருணை பவனியும் நடைபெறுகிறது.
பிப்.7-ல் கூட்டுத் திருப்பலி: பிப்ரவரி 6-ம் தேதி மாலை 6 மணிக்குத் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஏ.ஸ்டீபன் தலைமையில் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து புனித அந்தோணியாரின் தேர் பவனியும் நடைபெறுகிறது. தை மாத கடைசி செவ்வாய் கிழமையான பிப்ரவரி 7-ம் தேதி முற்பகல் 11.45 மணிக்குப் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் எஸ்.அந்தோனிசாமி தலைமையில் ஆண்டுப் பெருவிழா ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இதில் தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
பெருவிழா ஏற்பாடுகளைத் திருத்தல அதிபர் மி.மோட்சராஜன், ஆன்மிகத் தந்தை நி.சகாயதாசன், உதவிப் பங்குத்தந்தை ம.மிக்கேல்ராஜ், அருட்சகோதரி அற்புதம் மற்றும் பங்கு கிறிஸ்தவ மக்கள் செய்து வருகின்றனர்.