ஆன்மிகம்

வான்கலந்த மாணிக்கவாசகம் 07: துளையிடப்படாத முத்து

ந.கிருஷ்ணன்

ஏழைகளுக்கு உதவி செய்வதும், உண்ணும்போது ஒரு கைப்பிடியும் அனைவரும் செய்யக் கூடிய இறைக்காதல் என்று கண்டோம். அவரவர் தகுதிக்கு ஏற்பத் தொண்டுசெய்யும் இறைக்காதல் குறித்த விளக்கம் கேட்டு அன்பர்கள் பலரும் பேசியதால், இன்னும் இரு கட்டுரைகளில் அது பற்றி விளக்கிய பின், திருவடிப் பேறு கிடைத்ததும் மணிவாசகர் உணர்ந்த இறைக்காட்சி அனுபவங்களைப் பேசும் திருவாசகத் தேனைப் பருகுவோம்.

செய்தனவே தவமாகும்

மணிவாசகர் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிய ‘தவம்’ செய்யும் முறை அது. ‘நம் சிந்தனையில் சிவம் என்னும் அன்பு நிறைந்தால், நாம் செய்யும் அன்புத் தொண்டு எதுவாக இருந்தாலும், அத்தொண்டையே இறைவன் ‘தவம்’ ஆக்குவான்’ என்பதே.

சித்தம் ‘சிவம்’ ஆக்கி, செய்தனவே ‘தவம்’ ஆக்கும்

‘அத்தன் கருணை’யினால் தோள் நோக்கம் ஆடாமோ! - திருவாசகம்:15-6

திருவாசகத்தின் அடிநாதமே இந்தச் செய்திதான்.

சலவைத் தொழிலாளி நாயனார் ஆனார்

சலவைத் தொழிலாளியாக ஏழ்மையில் வாழ்ந்தாலும், தினந்தோறும் ஒரு சிவனடியாரின் உடையைச் சலவை செய்யும் தொண்டைச் செய்த பின்பே மற்றவர் உடைகளைச் சலவை செய்யும் கொள்கையுடன் வாழ்ந்துவந்த ஒரு அன்பரைத் ‘திருக்குறிப்புத் தொண்டர்’ என்னும் நாயனாராக உயர்த்திப் பெருமை தந்து அவரைச் சிவபெருமான் ஆண்டுகொண்டான்;

இறைவனிடம் அன்புடன் தொண்டு செய்வோர் வாழ்வின் கடைநிலையில் இருந்தாலும், அவர் செய்யும் தொண்டை வானுயர உயர்த்துவான் இறைவன். சிவாலயங்கள் தோறும் ‘திருக்குறிப்புத் தொண்டர்’ அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவராகச் சிவனடியார்களால் வழிபடப்படுகிறார். வானுயர அரண்மனைகளில் வாழ்ந்த மன்னர்கள் பலரும் கால ஓட்டத்தில் காணாமல் போயினர்; இறைப்பேறு அவர்களுக்குக் கிடைத்ததா என்பதும் நமக்குத் தெரியாது; ஆனால், அன்புடன் தன்னால் இயன்ற தொண்டு செய்த சலவைத் தொழிலாளி ‘திருக்குறிப்புத் தொண்ட’ராக இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, மக்கள் இதயங்களில் என்றும் குடியிருக்கிறார்.

எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,

அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி - திருவாசகம் - 2:125-126

எப்படிப்பட்ட பெருந்தன்மை யையும், எவ்வகைப்பட்டவர் திறத்தினையும், அவரவர்களின் பக்குவத்திற்கு ஏற்ற தன்மைகளால், ஆண்டுகொண்டு அருளுவான் இறைவன்.

குயவனார் நாயனார் ஆனார்

மண்பாண்டங்கள் செய்யும் தொழிலைச் செய்யும் குயவர் குலத்தில் தோன்றிய திருநீலகண்டர், சிவனடியார்களுக்குத் திருவோடு செய்து கொடுக்கும் திருத்தொண்டை செய்துவந்தார். அவரின் நடத்தையில் ஐயம் கொண்ட அவர் மனைவி, ‘எம்மைத் தீண்டுவீர் ஆயின் திருநீலகண்டம்’ என்று இறைவனின் மேல் ஆணையிட்டுக் கூறிவிட்டார்; எனவே, மனைவியை மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணையும் மனதாலும் நினைக்காமல் இளமையைத் துறந்தார்;

திருநீலகண்டர் கடினமாக முயன்று பெண் இன்பத்தைத் துறக்கவில்லை; நஞ்சைக் கண்டத்தில் கொண்ட சிவனின் தியாக வடிவான ‘திருநீலகண்டம்’, மேல் கொண்ட அளவற்ற அன்பு கூடிய பக்தியால், பெண்கள் நினைவுகூட அவரின் சிந்தையிலிருந்தே போயிற்று. முதுமையை அடைந்திருந்த திருநீலகண்டரின் அன்புத்தொண்டை உலகோருக்கு அறிவிக்கத் திருவிளையாடல் நிகழ்த்தி, கணவன், மனைவியைச் சேர்த்து வைத்து, மீண்டும் இளமையைத் தந்து, பின் ஆட்கொண்டு, திருநீலகண்ட நாயனாராக உயர்த்தினார் சிவபெருமான்.

இத்தகைய மக்கள் தொண்டினைச் சிறப்பிக்கும் பெரியபுராணத்தின் காப்பிய நாயகன் ‘தொண்டு’ என்னும் பண்பே. எனவே, இறைவனின் அன்பைப் பெற, ஒவ்வொருவரும் இறைத்தொண்டு செய்ய வேண்டும்; பலர் கூடி, கோயிலுக்குச் சென்று உழவாரப்பணி செய்யும் திருத்தொண்டு சிறப்பானதே! திருக்குறிப்புத் தொண்டரைப் போல, திருநீலகண்டரைப் போல, அவரவர் செய்யும் தொழில் அல்லது உழைப்பின் ஒரு சிறு பகுதியை, சக ஏழை மனிதர்களுக்குப் பயன்படும்படி செய்யும் தொண்டு அதனினும் மிகச் சிறப்பானது. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை ஒரு ஏழையின் படிப்பு, மருத்துவம், திருமணம், தொழில் போன்ற ஏதாவது ஒரு காரியத்துக்காகச் செலவிடலாம். அத்தகைய தொண்டு செய்ய, ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பண்பு, ‘அன்பு மனம்’ ஒன்றே!

ஞானமும் கல்வியும்

உயிர்ப் பிறவிகளிலேயே அரிதான மனிதப் பிறவியில் “கூன், குருடு, செவிடு” போன்ற குறைகள் இல்லாமல் பிறந்த ஒருவனுக்கு ஞானமும், கல்வியும் கைவரப்பெற்று, இறைச் சிந்தனையால், தானமும், தவமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்தால், இறைவனுடன் கலந்து நிலைத்த பேரின்பம் பெறுவது உறுதி என்பது அவ்வையார் வாக்கு. கல்வி உலகியல் அறிவையும், ஞானம் தொண்டோடு கூடிய இறையன்புடன் இணைந்த பேரறிவும் தரும். ஞானமில்லாத கல்வி பயனற்றது என்பதால் ஞானத்தை முதலிலும், கல்வியை அடுத்த இடத்திலும் வைத்தார் அவ்வையார்.

ஆபரணங்களை ஆண்டவன் விரும்புவதில்லை

அதேபோல, ‘தானம்’ என்னும் ‘தொண்டு’ இல்லாத இறை வழிபாடு பயனற்றது என்பதால், தானத்தை முதலிலும், தவத்தைப் பின்னும் வைத்தார். உலகில் தோன்றிய செல்வங்கள் யாவும் அனைத்து உயிர்களும் துய்ப்பதற்கானவை; உயிர்களுக்குத் தொண்டு செய்வதே நாம் இறைவனுக்குச் செலுத்தும் காதலும், நன்றியும் வணக்கமும் என்ற ஞானம் இல்லாததால், பெரும்பணம் வேண்டித் தங்க, வைர நகைகளைக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, பணம் சேர்ப்பது ஒன்றே குறியாகக் கொண்டு வாழ்நாளை வீணடிக்கிறார்கள் மனிதர்கள்; வேண்டுதல்-வேண்டாமை இல்லாத இறைவன் இத்தகைய ஆபரணங்களை ஒருபோதும் விரும்புவதில்லை.

அத்தகைய தொண்டு வழிபாட்டை ‘வாளாத் தொழும்பு’, அதாவது அன்பில்லாத வெறும் தொண்டு என்கிறார் மணிவாசகர். முன்பு தாம் அத்தகைய வாளாத்தொண்டு செய்து கடைப்பட்டதாகவும், சிவத்தைக் கூடியபின் தம்முடைய தொண்டு அன்புகூடிய தொண்டாகியது என்னும் திருவாசகம் காண்போம்.

சுடர்பொன் குன்றை, தோளா முத்தை, ‘வாளா தொழும்பு’ உகந்து

கடைபட்டேனை, ஆண்டுகொண்ட கருணாலயனை, கருமால், பிரமன்,

தடைபட்டு, இன்னும் சாரமாட்டாத் தன்னைத் தந்த என் ஆரமுதை,

புடைபட்டு இருப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? - திருவாசகம்:27-1

(தோளாமுத்து - துளையிடப்படாத முத்து, பொல்லாமணி - செதுக்கப்படாத மாணிக்கம்) முத்து துளைக்கப்பட்டே பயனைத் தரும்; இறைவனோ இயல்பாகவே பயனைத் தருபவனாதலால், ‘தோளாமுத்தே’ என்றும், மணி செதுக்கினால்தான் ஒளிதரும்; இறைவன் இயல்பாகவே ஒளியுடையவன்; எனவே, ‘பொல்லா மணியை’ என்றார்..

‘விதிப்படி’ என்றால் இறைவழிபாடு எதற்கு?

ஏழ்மையில் பிறப்பதோ, செல்வச் சூழலில் பிறப்பதோ, யாருடைய கையிலும் இல்லை; அவரவர் செய்த முன்வினைப் பயனால் பிறவி வாய்க்கிறது என்கிறது சைவசித்தாந்தம். வாழ்வில் ஒருவருக்கு எது எப்போது நடைபெறும் என்பது முன்பே விதிக்கப்பட்டுவிட்டது என்றால் மனித முயற்சியும், உழைப்பும் எதற்கு, இறை வழிபாடு கூட எதற்கு என்ற கேள்வி நமக்குத் தோன்றும். இதற்கான விடை கூறும் திருவாசகத் தேனை அடுத்த வாரம் சுவைப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

SCROLL FOR NEXT