ஆன்மிகம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் 2023 டிசம்பரில்தான் சனிப் பெயர்ச்சி விழா: கோயில் நிர்வாகம் விளக்கம்

செய்திப்பிரிவு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் 2023 டிசம்பர் மாதம்தான் சனிப் பெயர்ச்சி விழா நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜன.17-ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனால், பக்தர்கள் பலர் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இதே நாளில் சனிப் பெயர்ச்சி விழா நடைபெற உள்ளதாக கருதுகின்றனர்.

ஆனால், இக்கோயிலில் எப்போதுமே வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, டிசம்பர் மாதம்தான் சனிப் பெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது.

இதையடுத்து, சனிப் பெயர்ச்சிவிழா தொடர்பாக பக்தர்களிடையே நிலவும் குழப்பத்தைப் போக்கும்வகையில், தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி(கோயில்கள்) கு.அருணகிரிநாதன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் சிவாச்சாரியார்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே அனைத்து பூஜைகளும், விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இக்கோயிலின் மிக முக்கிய விழாவான சனிப் பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், நிகழாண்டு டிசம்பர் (மார்கழி) மாதம் நடைபெறுகிறது. வழக்கமாக தைப்பூசத்தின்போது வாக்கிய பஞ்சாங்கம் வெளியிடப்படும்.

துல்லியமான கணிப்பு.. அவ்வாறு பஞ்சாங்கம் வெளியிடப்பட்டப் பிறகு, ஒரு வார காலத்தில் சனிப் பெயர்ச்சி விழா நடைபெறும் தேதி, நேரம் ஆகியவை துல்லியமாக கணிக்கப்பட்டு, அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது, கோயில் சிவாச்சாரியார்கள் சிவ நடராஜ சிவாச்சாரியார், சந்திரசேகரர் சிவாச்சாரியார், ஞானசம்பந்த சிவாச்சாரியார், ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT