ஆன்மிகம்

கண்ணன் அருளால் இனி எல்லாம் சுகமே!: தித்திக்கும் திருப்பாவை 30

செய்திப்பிரிவு

கண்ணன் அருளால் இனி எல்லாம் சுகமே!

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி

அங்கு அப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்

பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசு உரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள்

செங்கண் - திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

விளக்கவுரை:

அலைகடல் கடைந்த மாதவன்;

திருமுடி அழகனான கேசவனிடம்,

நிறைமதி முகம்; செவ்வொளி வீசும் அணிகலன்களை உடைய இடைப் பெண்கள், கண்ணனிடம் சென்று, போற்றி வாழ்த்தி அவனுக்கு தொண்டாற்றும் பறை என்ற பேற்றைப் பெற்ற இவ்வழிமுறைகளை,

அழகிய புதுவை என்ற ஸ்ரீவில்லிபுத்தூரில்,

குளிர்ந்த பசும் தாமரை மாலையை உடைய பட்டர்பிரான் பெரியாழ்வார் மகளான கோதை என்ற ஆண்டாள் தன்

தோழியருடன் சங்கம் அமைத்து, சங்கம் வளர்த்த தமிழில் பாடிய பாமாலையான திருப்பாவை முப்பதையும் தவறாமல் இந்நிலவுலகில்

உரைப்பவர்களுக்கு, மலை போன்ற நான்கு தோள்களும், சிவந்த கண்களும், அழகிய திருமுகமுடைய செல்வம் மிக்க திருமால் திருவருள் பெற்று

எங்கும் எப்பொழுதும் இன்புற்று பேரின்பப் பெருவாழ்வு வாழ்வர்.

(இந்த முப்பது பாடல்களையும் பாடுவோர் அடையும் பேரின்பம்)

இதையும் அறிவோம்:

பராசர பட்டர் என்ற ஆச்சாரியர் தன் இல்லத்தில் திருப்பாவை விளக் கவுரை நிகழ்த்திக் கொண்டு இருந்தார். அப்போது அந்தணர்அல்லாத ஒருவர் வாசல் கதவு பக்கம் தயங்கி நின்றார். அதைக் கண்ட பட்டர் “தயங்காமல் உள்ளே வாரும்! இங்கே அனுபவிப்பது திருப்பாவை. அதனால் இவ்விடம் ‘சீர் மல்கும் ஆய்ப்பாடியாகிறது’. இங்கே எந்த வேறுபாடும் இல்லாமல் ஆண்டாள் கோஷ்டியில் சேர்ந்து கொள்ளலாம்” என்றார்.

- சுஜாதா தேசிகன்

SCROLL FOR NEXT