ஆன்மிகம்

108 வைணவ திவ்ய தேச உலா - 107 | திருப்பாற்கடல் க்‌ஷீராப்தி நாதன்

செய்திப்பிரிவு

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் திருப்பாற்கடல் 107-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இங்கு ப்ராக்ருத சரீரத்துடன் செல்ல இயலாது. க்ஷூக்‌ஷ்ம சரீரம் பெற்ற பிறகே செல்லலாம்.

இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் 51 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பெரியாழ்வார் பாசுரம்:

பையர வினனைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி

உய்ய உலகு படைக்க வேண்டி, உந்தியிற் தோற்றினாய் நான்முகனை

வைய மனிசரைப் பொய்யென்று எண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்

ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத்து அரவணைப் பள்ளியானே.


மூலவர்: க்ஷீராப்தி நாதன் | தாயார்: கடல் மகள் நாச்சியார், பூதேவி | தீர்த்தம்: அம்ருத தீர்த்தம், திருப்பாற்கடல்

மற்ற 106 திவ்ய தேசங்களையும் சேவித்தவர்களை, அவர்கள் பரமபதித்த பிறகு, ஸ்ரீமன் நாராயணனே அங்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.

பாற்கடல் வண்ணன் என்று அழைக்கப்படும் க்ஷீராப்தி நாதப் பெருமாள் இங்கு வெண்மை நிறத்தில் தெற்கு நோக்கி ஆதிசேஷ சயனத்தில் அருள்பாலிக்கிறார். பிரம்மதேவர் இத்தலத்தில்தான் படைக்கப்பட்டார்.

பாற்கடலைக் கடையும் நிகழ்வு பெரும் நிகழ்ச்சியாகும். அமுதத்தை வேண்டி பாற்கடலைக் கடைய தேவர்களும், அவர்களின் அரசனான இந்திரனும் முயற்சி செய்தனர். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமான் கழுத்தில் இருந்த வாசுகி பாம்பை கயிறாகவும் திரித்து, பாற்கடலைக் கடைவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் பெரும் ஆட்படை தேவைப்பட்டதால், அதற்கு அசுரர்களை அழைத்து, அவர்களுக்கும் அமுதத்தில் சமபங்கு தருவதாகக் கூறினர். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடையத் தொடங்கினர்.

மந்திரமலை பாற்கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது, திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து மந்திரமலையைக் காப்பாற்றினார். மீண்டும் பாற்கடலைக் கடையும் முயற்சி நடைபெற்றது. இப்போது வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் தவித்தது. ஆலகால விஷத்தைக் கக்கியது. இந்த விஷத்தால் உலக உயிர்கள் அனைத்தும் அழியும் நிலை ஏற்படும் என்று அஞ்சிய தேவர்கள், இதுகுறித்து சிவபெருமானிடம் கூறினர்.

உடனே சிவபெருமான், ஆலகால விஷத்தை உண்டார். அவருடைய வயிற்றுக்குள் இருக்கும் உயிர்கள் அழியக் கூடாது என்று நினைத்த பார்வதி தேவி, சிவபெருமான் வாயில் இருந்து விஷம் கீழே இறங்கா வண்ணம் அவரது கழுத்தைப் பிடித்தார். அதனால் ஆலகால விஷம் சிவபெருமானின் கழுத்திலேயே தங்கியது. இதன் காரணமாக சிவபெருமான் திருநீலகண்டர் என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு பாற்கடலைக் கடையும் பணி நடைபெற்றது.

பூலோகத்தில் உள்ள சில திவ்ய தேசங்கள் திருப்பாற்கடலுடன் தொடர்பில் உள்ளதாக கூறப்படுகிறது. க்ஷீராப்தி நாதன், வசுதேவன், அநிருத்தன், ப்ரத்யும்னன், சங்கர்ஷனன் ஆகிய 5 வியூகங்களின் (பஞ்ச வியூகம்) அடிப்படையில் இவ்வாறு கூறப்படுகிறது.

க்ஷீராப்தி நாதன் திருக்கோஷ்டியூரில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

வசுதேவன் திருநறையூரில் திருமகளை மணந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அநிருத்தன் திருஅன்பில் திருத்தலத்தில் அழகிய வல்லி நாச்சியாருடன் அருள்பாலிக்கிறார்.

ப்ரத்யும்னன் திருவெள்ளறை திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

சங்கர்ஷனன் உறையூர் தலத்தில் நந்த சோழரின் வளர்ப்பு மகளான கமலவல்லித் தாயாரை மணந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

SCROLL FOR NEXT