பசுக்கள் போன்ற கருணை வள்ளலே!
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்.
விளக்கவுரை:
பாலைக் கறக்க ஏந்தின குடங்கள் நிரம்பி,
எதிராக பொங்கி மேலே தளும்பும்படி
இடைவிடாது பாலைச் சொரியும் வள்ளல் போன்ற
பெருத்த பசுக்களை மிகுதியாக பெற்றுள்ள நந்தகோபனின் மகனே!
உன்னைத் தொழவந்தோம் என அறிந்து எழுந்து கொள்!
வேதத்தில் போற்றப்படுபவனே!
அந்த வேதத்தாலும் அறியப்படாத பெருமை உடையவனே!
இவ்வுலகில் அவதரித்துப் பிரகாசிப்பவனே! விழித்துக் கொள்!
உன் வலிமையைக் கண்டு தம் வலிமையை இழந்த பகைவர்கள்
உன் வாசலிலே கதியற்று, உன் திருவடிகளை தொழுதுகிடப்பதுபோல்
நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றித் தொழவந்துள்ளோம்!
(உலகுக்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக!)
இதையும் அறிவோம்:
தாய்லாந்து தேசத்தில் அவர்களுடைய தாய்மொழியில் திருப்பாவையை எழுதிவைத்துப் படிக்கிறார்கள் என்பது ஆச்சரியம்கிடையாது, ஆச்சரியமூட்டும் செய்தி, தாய்லாந்து அரசர் அரியணை ஏறும்போது அரசருடைய ராஜகுரு திருப்பாவை பாசுரங்களை ஓதுகிறார்! இந்த ராஜகுரு வம்சத்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் திருப்பாவை மட்டும் அல்லாமல், ஆண்டாளின் நாச்சியார் திருமொழி, ‘வாரணமாயிரம்’ போன்றவற்றையும் அவர்கள் ஓதுகின்றனர். தாய்லாந்தில் பாவை நோன்பையும் கடைபிடிக்கின்றனர்.
- சுஜாதா தேசிகன்