சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 104-வது திவ்ய தேசம் ஆகும். மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. இத்தலத்தை பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
பெரியாழ்வார் பாசுரம்:
கொம்பினார் பொழில் வாய் குயிலினம் கோவிந்தன் குணம் பாடுசீர்
செம்பொனார் மதிள் சூழ் செழுங் கழனியுடைத் திருக்கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான் தன் சின்னங்கள் இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே.
மூலவர்: சவுமிய நாராயணர் | தாயார்: திருமாமகள் | தீர்த்தம்: தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்
பிரம்மதேவனிடம் வரம் பெற்ற இரணியன் என்ற அசுரன், தேவர்களுக்கு எப்போதும் இன்னல்கள் அளித்து வந்தான். தேவர்கள் இதுகுறித்து திருமாலிடம் முறையிட்டனர். இரணியனின் தொந்தரவு இல்லாத இடத்தில் இதுகுறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று திருமாலிடம் கூறினர்.
இந்நிலையில் இத்தலத்தில் கதம்ப மகரிஷி திருமாலை நோக்கி தவம் இருந்தார். தான் தவம் செய்யும் இடத்தில் யாரும் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்ய இத்தலத்தை தேர்வு செய்தார் திருமால். அப்போது இரணியனை அழிக்க, தான் நரசிம்ம அவதாரம் எடுக்கப்போவதாக தேவர்களிடம் கூறினார் திருமால். மகிழ்ந்த தேவர்களும் கதம்ப மகரிஷியும் அந்த அவதாரத்தைக் காண விரும்பினர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவதாரம் எடுப்பதற்கு முன்பே தன்னுடைய நரசிம்ம கோலத்தை காட்டி அருளினார் திருமால்.
இதனால் மகிழ்ந்த அவர்கள், திருமாலின் பிற அவதாரங்களையும் காண விரும்பினர். அதன்படி பெருமாளும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என்று நான்கு கோலங்களைக் காட்டி அருள்பாலித்தார், மேலும் இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் ‘திருக்கோட்டியூர்’ என்று பெயர் பெற்றது.
அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். பிரகாரத்தில் நரசிம்மர், இரணியனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது.
தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். ‘ஓம்', ‘நமோ', ‘நாராயணாய' எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின்கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். திருமாமகள் தாயாருக்கு தனிசந்நிதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு.
சவுமிய நாராயணர்: சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டுமின்றி மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மதேவன், சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். மகாவிஷ்ணு இரணியனை வதம் செய்யும் வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது.
ஆளவந்தாரின் சீடர்களில் (பெரிய நம்பி, மாறநேரி நம்பி, பெரிய திருமலை நம்பி, திருமாலை ஆண்டான், திருக்கச்சி நம்பிகள்) ஒருவர் திருக்கோட்டியூர் நம்பி. அவரிடம் எட்டெழுத்து மந்திரத்தைப் பற்றி தனக்கு பின்னர் மடத்தையும் வைணவ சமயத்தையும் காக்க வரும் உடையவருக்கு உபதேசிக்குமாறு கூறினார் ஆளவந்தார். மேலும் தகுதியற்றவருக்கு இதைக் கற்பிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார்.
திருக்கோட்டியூர் நம்பிக்கு ராமானுஜரின் பணிவு மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் பதினெட்டு முறை மறுத்து, ராமானுஜரின் தகுதியை சோதித்த பின்னரே அவருக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். மேலும் இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். வைகுண்டம் செல்ல உதவும் மந்திரம் என்றும் தெரிவித்தார்.
திருக்கோட்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற்றதும் ராமானுஜரின் உடலில் புதிய ஒளி தென்பட்டது. மனதுக்குள் அந்த மந்திரத்தை ஜெபித்தார். தன்னுடைய சீடர்களைப் பார்த்தார், எதிரே சவுமிய நாராயண பெருமாள் கோயில் தெரிந்தது. கோயில் உள்ளே சென்று அனைத்து தெய்வங்களையும் வழிபட்டார். தீர்த்தக் கிணற்றைப் பார்த்தார். அந்த சிம்மக் கிணற்றில் திருமாலைக் கண்டார். தனது சீடர்கள் முதலியாண்டான், கூரத்தாழ்வான் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
கோயில் கோபுரத்தின் மீது ஏறினார். மக்களை அழைத்தார். அனைவரும் வந்தனர். இம்முறையும் குரு அவருக்கு உபதேசம் செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டாரோ என்று கவலைப்பட்டனர். வேறு ஏதாவது முடிவு எடுக்கப்போகிறாரோ என்றும் அச்சப்பட்டனர். அனைவரையும் எம்பெருமானார் வணங்கினார். அனைவருக்கும் கேட்கும்படி ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தை மூன்று முறை கூறினார்.
இதனால் குருநாதர் வாக்கை மீறிவிட்டதாக திருக்கோட்டியூர் நம்பி உடையவரை கடிந்து கொண்டார். தனக்கு இச்செயலுக்காக நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, உலக மக்கள் அனைவரும் இந்த மந்திரத்தை அறிந்து கொண்டு நற்கதி பெற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று உடையவர் கூறினார். அனைவரும் முக்தி அடைவதாயின், தான் ஒருவன் நரகத்துக்கு செல்வதும் தனது பாக்கியமே என்றார்.
இந்த பதிலைக் கேட்டதும் திருக்கோட்டியூர் நம்பி அரங்கனின் கருணையையும் இவரது கருணை மிஞ்சி விட்டதைக் கண்டு இவரே எம்பெருமானார் என்று மகிழ்ச்சியால் அவரை ஆலிங்கனம் செய்துகொண்டார். மேலும் வைணவ வழிபாட்டு முறை அன்றிலிருந்து எம்பெருமானார் தரிசனம் என்று அழைக்கப்படும் என்று அருளினார் திருக்கோட்டியூர் நம்பி.
ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு ‘கல்திருமாளிகை' என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சந்நிதிகள் உள்ளன.
இத்தலத்தில் உள்ள சிம்மக் கிணறு மிகவும் புகழ்பெற்றது. நவகோள்களில் ஒருவர் புதன். இவரது புதல்வன் புரூருவன் என்பவன் அசுர சக்ரவர்த்தியாகத் திகழ்ந்தான். ஒரு சமயம் இத்தலத்துக்கு புரூருவன் வந்த தினத்தன்று மாசிமகம், கங்கையில் நீராடி திருமாலை தரிசிக்க எண்ணியிருந்தான். ஆனால் அது நடவாது போனதால், திருமாலை வேண்டினான். திருமாலும் அவனுக்கு அருள்பாலித்து, கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வரும்படி செய்து அதன் நடுவே காட்சி அளித்தார். இக்கிணறு மகாமகக் கிணறு என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கிணற்றுத் தீர்த்தத்தில் மாசி மகத்தன்று நீராடி இத்தல பெருமாளை தரிசித்தால் நைமிசாரண்யம் தலத்தில் தவம் செய்த பயனும், கங்கை நதியில் நீராடி முக்தி பெற்ற பயனும் குரு தலத்தில் கடுகளவு தங்கம் தானம் செய்த பயனும் கிட்டும் என்பது நம்பிக்கை.
இக்கோயிலில் அருள்பாலிக்கும் சந்தான கோபால கிருஷ்ணர் (பிரார்த்தனைக் கண்ணன்) சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டு, விளக்கை இல்லத்துக்கு எடுத்துச் சென்று (காசும் துளசியும் வைத்து) வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும். விளக்கில் பெருமாளும் லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். திருமணத் தடை நீக்கும் முக்கிய தலங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க இங்கு வேண்டிக் கொள்ளலாம்.
மாசி மாத தெப்பத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இருப்பிடம்: மதுரையிலிருந்து 65 கிமீ தொலைவிலும், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கிமீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கிமீ. தொலைவில் உள்ளது.