உன்னையன்றி வேறு யார் அருள் புரிவார்?
குத்து விளக்கு எரியக் கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்;
மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய்.
விளக்கவுரை:
குத்துவிளக்கு ஒளிவீச, யானைத் தந்தத்தாலான
கால்களையுடைய கட்டில் மேல்,
மென்மையான பஞ்சு படுக்கையின் மேலேறி,
கொத்தாக மலர்கின்ற பூக்களைக் கூந்தலில் சூட்டிய நப்பின்னையின்
மார்பில் தனது அகன்ற மார்பைப் புதைத்துக் கிடப்பவனே! வாய்திறந்து பேசு!
மை தீட்டிய விரிந்த கண்களுடைய நப்பின்னையே!
உன் கணவனான கண்ணனின் பிரிவை
ஒரு நொடி கூடப் பொறுக்கும் வல்லமையற்று, உள்ளதால்
எவ்வளவு நேரமானாலும் அவனைத் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க விடுவதில்லை!
நீ இப்படிச் செய்வது உன் சுயரூபத்தில் சேராது, உன் சுபாவமும் ஆகாது.
(நப்பின்னை பிராட்டியை மீண்டும் எழுப்புதல்)
இதையும் அறிவோம்:
இந்தியத் தொல்லியல் துறை மொத்தம் 32 கல்வெட்டுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரதி எடுத்துள்ளது. இதில் மிகவும் பழமையானது, சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் 15-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கிபி. 961). இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்து (கிபி. 1178-1218) கல்வெட்டு ஒன்றில் செம்மறியாட்டைக் கோயிலுக்குத் தானமாக ஒருவர் கொடுத்த செய்தி உள்ளது! கல்வெட்டுகளில் ‘சூடிக் கொடுத்து அருளிய நாச்சியார்’, ‘ஸ்ரீ விஷ்ணு சித்த வளாகம்’ என்ற பெயர்கள் காணப்படுகின்றன.
- சுஜாதா தேசிகன்