மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் கேதுவுடன் இருப்பது சிறப்பாகும். புதன் 8-ல் உலவுவதும் நல்லது. 30-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராக இருந்துவரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரப் பயணம் பயன்படும். பெற்றோரால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்கள் நலம் புரிவார்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 29 (முற்பகல்), 31, ஜனவரி 1, 2.
திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், சிவப்பு, பச்சை.
எண்கள்: 5, 7, 9.
பரிகாரம்: குருவுக்கும் சனிக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. ஹனுமன் சாலீஸா படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 9-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் சந்திரன் 8-ல் சூரியனுடன் கூடி உலவுவதால் உடல்நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 31-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். தொலைதூரப் பயணம் நலம் தரும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிய முன்வருவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் நிலை உயரும்.
கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். மாதர்களது நோக்கம் நிறைவேறும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 10-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. தொழில்ரீதியாகச் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும். 4-ல் ராகுவும் 8-ல் சூரியனும் இருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் மன வருத்தம் உண்டாகும். அலைச்சலைத் தவிர்க்க இயலாது. தந்தை நலனில் கவனம் தேவைப்படும். அரசு விவகாரங்களில் விழிப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 31, ஜனவரி 1, 2, 4.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 7, 9.
பரிகாரம்: சூரியன், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் புதனும் சனியும் 8-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. நல்லவர்களின் நட்புறவை வலுப்படுத்திக் கொண்டு அவர்களது ஆலோசனைகளின்படி செயல்படுவதன் மூலம் நலம் பெறலாம். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். வழக்குகளில் அனுகூலமான போக்கு தென்படும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும்.
30-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடத்திற்கு மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். நற்காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோருக்கெல்லாம் திறமை வீண்போகாது. கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 30, ஜனவரி 2, 4.
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், நீலம், பச்சை.
எண்கள்: 4, 5, 6, 8.
பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வதும் ஹோமம் நடக்குமிடம் சென்று கலந்து கொள்வதும் நல்லது.
கடக ராசி வாசகர்களே
சூரியன் 6-ல் உலவுவது சிறப்பாகும். இதர கிரகங்கள் கோசாரப்படி சாதகமாக இல்லை. இதனால் எதிர்ப்புக்களும் குறுக்கீடுகளும் ஏற்படவே செய்யும். மனதில் ஏதேனும் கவலை உண்டாகும். மக்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் உடன்பிறந்தவர்களாலும் சங்கடம் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபட்டால் பிரச்னைகளுக்கும் விபத்துக்கும் ஆளாகாமல் தப்பலாம். வீண்சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும்.
புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபடலாகாது. புதிய துறைகளில் முதலீடு செய்ய இந்த நேரம் சிறப்பானதாகாது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். கெட்ட எண்ணங்களுக்கும் கெட்டவர்களின் தொடர்புகளுக்கும் இடம் தரலாகாது. செய்தொழிலில் அதிக கவனம் தேவை. அரசியல், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஜாதக பலம் உள்ளவர்களுக்குச் சோதனைகள் குறையும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 29 (முற்பகல்), ஜனவரி 1, 4 (பிற்பகல்).
திசை: கிழக்கு.
நிறம்: ஆரஞ்சு.
எண்: 1.
பரிகாரம்: நவக்கிரகங்களையும் வழிபடுவது நல்லது. முடிந்தவர்கள் கணபதி, நவக்கிரக ஹோமம் செய்யலாம்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 4-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ம் இடத்திற்கு மாறுவது குறை. மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். பண நடமாட்டம் திருப்திகரமாக இருந்துவரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். குடும்ப நலம் சிறக்கும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
மாணவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பயணத்தின்போது பாதுகாப்புத் தேவை. கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களால் சிறுசிறு தொல்லைகள் உண்டாகும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பழகுவது நல்லது. கூட்டுத்தொழிலில் அதிக கவனம் தேவை. பங்குதாரர்கள் உங்களை விட்டு விலக நேரலாம். அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கவே செய்யும். நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 29 (முற்பகல்), ஜனவரி 1, 2.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், தாமரை நிறம், பச்சை.
எண்கள்: 1, 3, 5.
பரிகாரம்: பராசக்தியை வழிபடுவது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது நல்லது. புதிய சொத்துக்கள் சேரவும், சொத்துக்களால் ஆதாயம் பெறவும் வாய்ப்பு உண்டாகும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்குகளிலும் போட்டிகளிலும் வெற்றி கிட்டும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
பெண்களுக்கு உற்சாகம் பெருகும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். சோம்பலுக்கு இடம் தரலாகாது. 30-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடத்திற்கு மாறுவதால் மாதர்களுக்குப் பிரச்சினைகள் சூழும். கலைஞர்களுக்கு எதிர்ப்புக்கள் கூடும். வாகனத்தில் செல்லும்போது பாதுகாப்பு தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 29 (முற்பகல்), ஜனவரி 1, 2, 4.
திசைகள்: மேற்கு, தெற்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், மெரூன்.
எண்கள்: 6, 7, 8, 9.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.