ஆன்மிகம்

108 வைணவ திவ்ய தேச உலா - 98 | திருகுருகூர் ஆதிநாத பெருமாள் கோயில்

செய்திப்பிரிவு

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருகுருகூர் (ஆழ்வார் திருநகரி) ஆதிநாத பெருமாள் கோயில் 98-வது திவ்ய தேசம் ஆகும். நவதிருப்பதிகளில் 5-ம் திருப்பதி ஆகும். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். நம்மாழ்வாரின் அவதாரத் தலம் இதுவாகும். நவகிரகத்தில் வியாழனுக்குரிய தலமாகும். மதுரகவியாழ்வார் இத்தலத்தில் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார்.

நம்மாழ்வார் பாசுரம்:

ஓடி ஓடி பல் பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள்
ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே



மூலவர்: ஆதிநாதன், ஆதிபிரான் நின்ற திருக்கோலம் | உற்சவர்: பொலிந்து நின்ற பிரான் | தாயார்: ஆதிநாதநாயகி, திருகுருகூர் நாயகி | தலவிருட்சம்: புளியமரம் | தீர்த்தம்: தாமிரபரணி, குபேர தீர்த்தம்

குருகு என்றால் சங்கு என்று பொருள். அவ்வாறு ஆற்றில் மிதந்து வந்த சங்கு, இத்தல பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் திருகுருகூர் என்ற பெயரைப் பெற்றது இத்தலம். ஒரு சமயம் திருமாலின் அம்சமாக விளங்கும் வியாச முனிவரை அவரது மகனான சுகமுனிவர் இத்தலத்தின் மகிமையைக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அவரும் இத்தலத்தின் மகிமையைக் கூறலானார்.

பல அவதாரங்கள் எடுத்து தன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது பரந்தாமனுக்கு மிகவும் பிடித்தமான விஷயம். நான்முகனுக்கு முதன்முதலில் படைப்புத் தொழில் செய்யும் பணியை அளித்தபோது, நான்முகன் அதற்கு சிறிது அஞ்சினான். தனது ஐயத்தைப் போக்கிக் கொள்ள, திருமாலை சந்திக்க எண்ணி ஓராயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார். தனது கடும் தவத்தின் பயனாக நான்முகன் முன்னர் திருமால் தோன்றினார்.

நான்முகனின் படைப்புத் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார். பின்னர் நான்முகனின் தவ வலிமையால் அவனது படைப்புத் தொழிக்கு உதவி புரியும் வண்ணம், தான் இப்போது அவதரித்ததால், இந்தத் தலம் ஆதிக்ஷேத்ரம் என்று அழைக்கப்படும் என்றார். இத்தலத்தில் தன் திருநாமம் ஆதிநாதன் என்று விளங்கும் என்றார்.

இதைக் கேட்ட நான்முகன், தனக்கு குருவாக இருந்து உபதேசித்ததால் இத்தலம் குருகுகாக்ஷேத்ரம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று திருமாலிடம் விண்ணப்பித்தார்.



‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறிய திருமால், “ஆதிக்ஷேத்ரத்தில் ஆதிநாதனை வழிபட்டால் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். கலியுகத்தில் சடகோபர் என்ற பெயருடன் யோகியாக அவதரித்து, வடமொழி வேதங்களை தமிழில் மொழிபெயர்த்து, அந்த வேதங்களை படிக்கும் மாந்தர் அனைவரும் முக்தி அவையும் வண்ணம் சித்தம் செய்யப் போகிறேன்” என்றார்.

ஒரு காலத்தில் புனித யாத்திரை செல்லும் மகான்கள் இத்தலத்தில் வந்து பெருமாளை தரிசிப்பது வழக்கம். அந்த நேரத்தில் இத்தலத்துக்கு வந்த யானைக்கும் வேடனுக்கும் வாக்குவாதம் முற்றி, ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டு மாண்டனர். அவர்களை மேலோகம் அழைத்துச் செல்ல விஷ்ணுதூதர்கள் வந்திருந்தனர். இருவரும் சண்டையிட்டு செய்த தவறுகள் காரணமாக இருவரையும் அழைத்துச் செல்ல யமதூதர்களும் வந்திருந்தனர். விஷ்ணுதூதர்களை எதிர்க்க முடியாமல் யமதூதர்கள் சென்றனர். ஆறறிவு கொண்ட வேடனுக்கும், ஐந்தறிவு கொண்ட யானைக்கும் முக்தி கிடைத்த நிகழ்வை முனிவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

பல காலங்களுக்கு முன்பு மந்தன் என்ற அந்தணச் சிறுவன் வேதம் கற்க விருப்பம் கொண்டான். அவனது மனம், வேதங்களில் ஒன்றவில்லை. இதனால் கோபமுற்ற அவனது குரு அவனை சபித்து பாடசாலையில் இருந்து அனுப்பிவிட்டார். பின்னர் அவன் கோயில்களில் பணிசெய்து இயற்கை எய்தினான். அடுத்த பிறவியில் தாந்தன் என்ற பெயரில், ஒழுக்க சீலனாக வாழ்ந்தான். ஆனாலும் அவனை அனைவரும் வெறுத்து ஒதுக்கினர். இந்நிலை குறித்து குருகூர் ஆதிநாதனை வணங்கி, முறையிட்டான். உடனே அவனை ஒதுக்கிய அனைவருக்கும் கண்பார்வை இல்லாமல் போனது. அனைவரும் திருமாலை சரண் அடைந்தனர்.


அவர்களுக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்தது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தாந்தனுக்கு திருமால் காட்சி கொடுத்து அவனுக்கு முக்தி அளித்தார். இதன் காரணமாக இத்தலம் தாந்த க்ஷேத்ரம் என்ற பெயர் பெற்றது.

காரியார் என்னும் குறுநில மன்னருக்கும் உடையநங்கைக்கும் மகனாக தோன்றினார் சடகோபர். சடகோபர் பிறந்ததில் இருந்தே கண்மூடிய நிலையில் அழாமல், சாப்பிடாமல் இருந்ததைக் கண்ட அவரது பெற்றோர், அவரை கோயிலுக்கு அழைத்து வந்தனர். உடனே அவர் ஓடிச் சென்று ஒரு புளியமரத்தின் பொந்தில் அமர்ந்து கொண்டார். அதன் பின்னர் அவர் உணவில்லாமல் 16 ஆண்டுகள் இருந்தார்.

மதுரகவியாழ்வார் என்பவர் திருமால் பக்தராக இருந்து, திருமால் புகழைப் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வயலில் மேய்ந்த பசுவை விரட்டும்போது, அப்பசு விழுந்து இறந்து விடுகிறது. அந்த பாவத்தை களைவதற்காக புனித நீராடுவதற்காக வடநாட்டுக்கு யாத்திரை சென்றிருந்தார். அவர் அயோத்தியில் பாடிக்கொண்டிருந்தபோது, தென் திசையில் ஒரு பேரொளியைக் கண்டார். அந்த ஒளி புளிய மரத்தருகே வந்ததும் மறைந்து விட்டதை உணர்ந்தார்.



இனி அவர்தான் தனது குரு என முடிவு செய்து, சடகோபரை அணுகி தன்னை சீடராக ஏற்கும்படி கூறினார். அவ்வாறே அவரை சீடராக ஏற்றுக்கொண்டு திவ்யபிரபந்தத்தை உபதேசித்தருளினார். மேலும் ரிக், யஜூர், அதர்வண வேதங்களின் சாரத்தை முறையே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி போன்றவற்றையும் உபதேசித்தார். எனவே சடகோபராகிய நம்மாழ்வார் வேதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரியவரானார்.

அறிவாலும், ஞானத்தாலும், பக்தியாலும் சிறந்து விளங்கிய சடகோபரை அனைவரும் இவர் நம்மவர் என விரும்பி அழைக்க நம்மாழ்வார் என்ற பெயர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிய மகிழமாலையை அணிந்திருந்த காரணத்தால், வகுளாபரணர் என்ற பெயரும் உண்டானது.

ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.


இந்திரன் தாய், தந்தையரை மதிக்காமல் சாபம் பெற்று இங்கு வந்து தான் சாபவிமோசனம் அடைகிறான். லட்சுமணன் இங்கு புளியமரமாக இருப்பதாகவும், பெருமாள் பிரம்மச்சரிய யோகத்தில் இருப்பதாகவும் ஐதீகம். இருந்தும் லட்சுமி பெருமாளை அடைய இங்கு தவமிருந்ததால், பிரம்மச்சாரியாக இருந்த பெருமாள் லட்சுமியை மகிழ மாலையாக தன் கழுத்தில் அணிந்துகொண்டதாக புராணம் தெரிவிக்கிறது.

இக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது இக்கோயிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நம்மாழ்வார் தனிக் கோயிலைச் சுற்றி உள்ள பிரகாரச் சுவர்களில் 108 திவ்யதேசப் பெருமாள்களின் உருவங்கள் ஓவியங்களாய்த் தீட்டப்பட்டுள்ளன. பல்வேறு வரலாற்றுக் கதைகளும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவக்கிரக தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அமைவிடம்: திருநெல்வேலியில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது.

SCROLL FOR NEXT