ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட திருவிழாவின் பகல்பத்து உற்சவம் பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் இறுதி நாளான ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி நீராட்ட திருவிழாவில் ஆண்டாள் வளர்ந்த திருமாளிகையில் பச்சைப்பரப்புதல் வைபவம் நடைபெறுவது வழக்கம். இந்நாளில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருடன் வந்து பிறந்த வீட்டு சீர்வரிசை பொருட்களை பெற்று செல்வார். பச்சை பரப்புதலை ஸ்ரீஆண்டாள் பார்த்த பின்பு, அந்த காய்கறிகளை வீடுகளுக்கு எடுத்து சென்றால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
அதன்படி மார்கழி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று ஆண்டாள் வளர்ந்த திருமாளிகையில் கரும்பு, நெல்லிக்காய், வாழைக்காய், கரும்பு, தடியங்காய், கத்திரிக்காய், முருங்கைகாய் உள்ளிட்ட காய்கறிகள் பரப்பி வைக்கப்பட்டு பச்சை பரப்புதல் உற்சவம் நடைபெற்றது. இதில் கோயிலில் வைத்து ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின் சர்வ அலங்காரத்தில் மேள தாளம் முழங்க ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருடன் திருமாளிகைக்கு வந்தார். பெரியாழ்வார் வம்சாவளியை சேர்ந்த வேதபிரான் பட்டர் சுதர்ஸன், ஆண்டாள் ரெங்கமன்னாரை வரவேற்று அழைத்து சென்றார்.
அப்போது மணி பருப்பு, திரட்டுபால், அக்கார வடிசல் படைத்து வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் திருமாளிகையில் பரப்பி வைத்திருந்த பச்சை காய்கறிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இதுகுறித்து பெரியாழ்வாரின் 225-வது வம்சாவளியான வேதபிரான் பட்டர் சுதர்ஸன் கூறியதாவது, ‘‘ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருடன் தனது தந்தை வீட்டிற்கு ஆண்டுக்கு ஒரு முறை பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளில் எழுந்தருள்வார். இங்கு ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு கட்டளைப்பட்டி யாதவ சமுதாய மக்கள் வழங்கும் பச்சை காய்கறிகள் மற்றும் சீர்வரிசைகளை பொருட்களை பெற்று செல்வார். அதன்படி நேற்று தான் வளர்ந்த திருமாளிகைக்கு வந்த ரெங்கமன்னாருடன் வந்த ஸ்ரீஆண்டாள் பச்சை காய்கறிகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை பெற்று சென்றார். அன்று இரவு வீட்டில் சாயரட்சை பூஜை நடைபெறும். இதற்கு பச்சை பரப்புதல் என்று பெயர். பச்சை காய்கறிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது" என்றார்.