ஆன்மிகம்

கண்ணனை நினைத்து உறக்கமா?: தித்திக்கும் திருப்பாவை - 7

செய்திப்பிரிவு

கண்ணனை நினைத்து உறக்கமா?

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?

தேசம் உடையாய்! திற ஏலோர் எம்பாவாய்.

விளக்கவுரை

‘கீச்சு கீச்சு’ என்று எங்கும் வலியன் பறவைகள் ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் ஆரவாரம் கேட்கவில்லையா? மதி கெட்ட பெண்ணே!

அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கலகலவென்று ஒலிக்க,

வாசனை வீசும் கூந்தலை உடைய இடைப்பெண்கள்

கைகளை மாறிமாறி அசைத்து மத்தினால் தயிர்கடையும் ஓசை கேட்கவில்லையா? பெண்களின் தலைவியே!

கேசியை வதம் செய்த நாராயணனான கண்ணனைநாங்கள் பாட கேட்டுக் கொண்டே உறங்குவாயோ? பிரகாசமானவளே! கதவைத் திற!

(பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்)

இதையும் அறிவோம்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்ரசாயீ மற்றும் ஆண்டாளின் கோயில்களுக்கு நடுவில் ஒரு நந்தவனம் இருக்கிறது. இது ஆண்டாள் அவதார ஸ்தலமாக போற்றப்படுகிறது. இந்த நந்தவனத்தில் தான் பெரியாழ்வார் ஆண்டாளைக் குழந்தையாகத் துளசி செடிகளுக்கு இடையே கண்டெடுத்தார். இங்கே துளசி மடத்துடன் ஆண்டாளுக்கு ஒரு தனி சந்நிதி இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஆண்டாளின் நட்சத்திரமான பூரம் அன்று இங்கே ஆண்டாள் எழுந்தருளுவதாக ஐதீகம்.

- சுஜாதா தேசிகன்

SCROLL FOR NEXT