திருவண்ணாமலை: 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீப தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து, அண்ணாமலையார் கோயிலுக்கு மகா தீப கொப்பரை நேற்று கொண்டு வரப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நவ.24-ம் தேதிதொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த 6-ம் தேதி அதிகாலை 3.40 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட்டன. மகா தீபத்தை கடந்த 11 நாட்களாக பக்தர்கள் தரிசித்தனர். இதற்காக, 4,500 கிலோ நெய், 1,100 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டன. மகா தீப தரிசனம் நேற்று அதிகாலையுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, 2,668 அடி உயரம்உள்ள அண்ணாமலை உச்சியில் இருந்து மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட்ட கொப்பரையை கீழே இறக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. இப்பணியில் 30-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். அண்ணாமலையார் கோயிலை சென்றடைந்ததும், மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கொப்பரையில் இருந்து சேகரிக்கப்படும் தீப மை, ஆரூத்ரா தரிசன வழிபாட்டின்போது, நடராஜ பெருமானுக்கு சாத்தப்படும். பிறகு, பிரசாதமாக வழங்கப்படும்.