மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் கேதுவுடன் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் முன்னேறுவீர்கள். பொருளாதார நிலை சீராக இருந்துவரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நிலம், மனை, வீடு, வாகனம் சேரும். சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். நல்லவர் அல்லாதவர்களை இனம் கண்டு அவர்களிடமிருந்து விலகியிருப்பது அவசியமாகும். பயணத்தால் நலம் உண்டாகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.
ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். வாரப் பின்பகுதியில் சந்திரன், சனி, வக்கிர புதன் ஆகியோருடன் கூடுவதால் மனஅமைதி குறையும். உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் தடைபடும். தாய் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்டமான தேதி: டிசம்பர் 23. திசைகள்: வடமேற்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், சிவப்பு | எண்கள்: 7, 9 |
பரிகாரம்: குரு, சனிக்கு அர்ச்சனைகள் செய்துவருவது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 9-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். மக்களால் பாக்கியம் கிடைக்கும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு மகப்பேறு வாய்ப்பு கூடிவரும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். மந்திர, தந்திர, யந்திர காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வளர்ச்சி தெரியவரும்.
போட்டிகளில் வெற்றி உண்டு. எதிரிகள் பணிந்து போவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் வெற்றிப் படிகளில் ஏறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உடல் நலம் பாதிக்கப்பட நேரலாம்; கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 23, 26. | திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு
நிறங்கள்: மெரூன், இளநீலம், பொன் நிறம் | எண்கள்: 3, 6, 7, 9.
பரிகாரம்: ஆதித்யஹ்ருதயம், துர்க்கை கவசம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் சனியும் 8-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். நிலபுலங்களால் வருவாய் கிடைத்துவரும். மக்கள் நலம் கவனிப்பின்பேரில் சீராகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். எதிர்ப்புகள் இருக்கும் என்றாலும் சமாளிப்பீர்கள். பயணத்தால் ஒரு எண்ணம் ஈடேறும். தோல் பொருட்கள், போக்குவரத்துச் சாதனங்கள், விளைபொருட்கள், கறுப்பு நிறப் பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். தந்தை நலனில் அக்கறை தேவைப்படும். பிறரிடம் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. 28-ம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெற்று 6-ல் உலவும் நிலை அமைவதால் வியாபாரிகளுக்கு மந்தநிலை விலகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 23, 26 | திசைகள்: தென்மேற்கு, மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், நீலம் | எண்கள்: 4, 6, 8.
பரிகாரம்: தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவுவது நல்லது.
கடக ராசி வாசகர்களே
சூரியன் ஒருவரே அனுகூலமாக உலவுகிறார். கோசாரப்படி இதர கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இல்லை. பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்யலாகாது. ஏமாற்றம், இழப்பு ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் மன அமைதி கெடும். மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மனத்தில் ஏதேனும் சலனம் இருந்துவரும். அரசியல், நிர்வாகம், எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் துறைகள் ஆக்கம் தரும்.
தந்தையால் அனுகூலம் உண்டாகும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் மூலம் நன்மைகள் ஏற்படும். 2-ல் ராகுவும், 8-ல் செவ்வாயும் கேதுவும் இருப்பதால் பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு அவசியமாகும். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். விஷ பயம் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடுதேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 23, 26 | திசைகள்: கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை | எண்கள்: 1, 2.
பரிகாரம்: குல தெய்வத்தையும் நவக்கிரகங்களையும் வழிபடவும். வீண்வம்பு, சண்டைகளைத் தவிர்க்கவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குரு உலவுவது சிறப்பாகும். பேச்சாற்றல் கூடும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். கடன் தொல்லைகள் குறையும். கள் எளிதில் தீரும். தனவந்தர் சகாயம் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். முகப்பொலிவு கூடும். நல்ல தகவல் வந்து சேரும். அலைச்சலும் உழைப்பும் கூடும் என்றாலும் அதற்கான பயனும் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும்.
மக்களால் நலம் உண்டாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. நல்ல அணுகுமுறையை வளர்த்துக்கொள்ளவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 28-ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 23, 26. | திசை: வடகிழக்கு
நிறங்கள்: பொன் நிறம், தாமரை நிறம் | எண்கள்: 1, 3.
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும். அர்த்தாஷ்டமச் சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வருவது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது நல்லது. மனத்தில் உற்சாகம் பெருகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்குகளிலும் போட்டி பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு சீராக இருந்துவரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும்.
கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். தம்பதிகள் உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் உதவி புரிவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. கண் உபத்திரவம் ஏற்படும். வீண் அலைச்சலைக் குறைத்துக்கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 23, 26 | திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, தெற்கு, வடமேற்கு
நிறங்கள்: வெண்மை, நீலம், மெரூன் | எண்கள்: 6, 7, 8, 9.
பரிகாரம்: சூரியனையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.