திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 89-வது திவ்ய தேசம் ஆகும். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பது தனிச்சிறப்பு. இத்தலத்தை திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமழிசை ஆழ்வார் பாசுரம்:
கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும்பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்ட தோள் இரணியன் சினங்கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே.
மூலவர்: வைஷ்ணவ நம்பி | தாயார்: குறுங்குடிவல்லி நாச்சியார் | தீர்த்தம்: திருப்பாற்கடல், பஞ்சதுறை
தலவரலாறு: ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்கிறார்.
மகேந்திர கிரி அடிவாரத்தில் பாணர் குடியில் பிறந்த நம்பாடுவான் என்பவர் இத்தலத்து பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்டு கைசிகப் பண்ணில் அவரை பாடி வணங்கி வந்தார். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று விரதம் இருப்பது அவர் வழக்கம்.
ஒரு சமயம் அவர் விரதம் இருக்கும் அன்று அவர் பாடியவண்ணம் காட்டுப் பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது பிரம்ம ராட்சசன் ஒருவன் அவரை உண்ணப்போவதாக அவரிடம் தெரிவித்தான். நம்பாடுவானும் தான் விரதத்தில் இருப்பதால் விரதம் முடிந்ததும் அவனுக்கு உணவாக தன்னைத் தருகிறேன் என்றார். ராட்சசன் இவரை நம்ப மறுத்ததால், தான் திருமால் பக்தன் என்றும் பொய் சொல்ல மாட்டேன் என்றும் அவனிடம் கூறுகிறார். அவனும் அதற்கு உடன்படுகிறான்.
பிரம்ம ராட்சசனுக்கு கொடுத்த வாக்குப்படி தனது இறுதி யாத்திரையை எண்ணி பெருமாளைப் பார்க்க நினைத்தார். ஆனால் உள்ளே செல்ல முடியாததால் (பாணர் இனத்தவர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை) வருத்த மிகுதியால் கோயிலுக்கு வெளியே நின்று ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறார். திடீரென்று துவஜஸ்தம்பம் விலகி எம்பெருமான் தெரிய சந்தோஷமாக நம்பாடுவான் பெருமாளை தரிசனம் செய்தார்.
நம்பாடுவனுக்காக விலகிய நகர்ந்த கொடிமரம் இன்னமும் அப்படியே விலகி இருப்பதை இங்கு காணலாம். தரிசனம் முடித்து நம்பாடுவான் பிரம்ம ராட்சசனைக் காணச் செல்லும்போது, காட்டு வழியில் திருக்குறுங்குடி பெருமாள் வயது முதிர்ந்த அந்தணராக வேடமிட்டு அவ்வழியே செல்லவேண்டாம் என்றும் அங்கு பிரம்ம ராட்சசன் இருக்கிறான் என்றும் அங்கு சென்றால் உங்களை அவன் உண்டுவிடுவான் என்றும் அவரிடம் தெரிவிக்கிறார்.
இருப்பினும், “பரவாயில்லை. நான் இத்தல பெருமான் மீது சத்தியம் செய்திருக்கிறேன். நான் சத்தியம் தவறமாட்டேன்” என்று நம்பாடுவான் அந்த முதியவரிடம் தெரிவிக்கிறார். அதைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் தன் சுயரூபம் காட்டி அவருக்கு அருள்பாலித்தார்.
பிறகு பிரம்ம ராட்சசனிடம் சென்று தன்னை உணவாக உட்கொள்ளும்படி கூற, அவன் தனக்குப் பசி இல்லை என்று கூறி இவரது விரத புண்ணியத்தில் கால் பாகத்தையாவது கொடுங்கள் என்று சரண் அடைந்தான். ஏன் இந்த பிரம்ம ராட்சச கோலம் என்று நம்பாடுவான் கேட்க அதற்கு அவன், “முற்பிறவியில் யோகஷர்மா என்ற அந்தணராக இருந்தபோது யாகம் செய்வதை இழிவாகப் பேசியதால் இவ்வாறு ஆகிவிட்டேன். உண்மையான பக்தர்களின் தரிசனத்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்பதால் இப்போது நீங்கள் எனக்கு சாபவிமோசனம் கொடுக்க வேண்டும்” என்று கூறினான்.
நம்பாடுவானும் மிக்க மகிழ்ச்சியுடன் தான் கைசிகம் என்ற பண் பாடிப் பெற்ற பலத்தில் பாதியை அவனுக்கு தருகிறேன் என்று கூறியதும் அவனுக்கு சாப விமோசனம் கிடைத்தது. இந்த வரலாற்றை வராக மூர்த்தியே தன் மடியில் இருக்கும் பிராட்டியிடம் சொல்லியதாக கைசிக புராணத்தில் கூறப்படுகிறது.
இந்தக் கோயில் சுற்றளவு மிகப்பெரியது. இது கோயிலின் நுழைவு வாயில். சுவர்கள் எல்லாம் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய கல்சிலைகளால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த அழகிய நம்பிராயர் கோயில், தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் 1,600 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் 108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று . மகேந்திரகிரியின் அடிவாரத்தில் அமைந்த இந்தக் கோவிலை ‘திருமங்கை ஆழ்வார்’ கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
வைணவ கோயிலான இங்கு கோயிலின் உள்ளேயே சிவன் கோயிலும், பைரவர் சந்நிதியும் அமைந்திருப்பது மிகச்சிறந்த அம்சமாகும். கோயில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடைபெறும்போது, இங்குள்ள சிவனுக்கும் பூஜை நடந்தது என்பதை அறிந்து கொள்வர். நம்மாழ்வாராக அவதரித்தது அழகிய நம்பிதான். திருமங்கையாழ்வார் நம்பெருமாளிடம் மோட்சம் கேட்க, அவரை திருக்குறுங்குடிக்கு செல்லுமாறு பணித்தார் நம்பெருமாள். திருமங்கையாழ்வார் நிறைவாக மங்களாசாசனம் செய்தது இத்தலத்தில் தான்.
நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் அருள்பாலிக்கிறார். குரங்கம் என்றால் பூமாதேவி. பூமாதேவி இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்துக்கு குரங்கச் க்ஷேத்ரம் என்ற பெயர் உண்டு. வராக அவதாரம் கொண்டு திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது பயங்கர வராக ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் ‘குறுங்குடி’ ஆனது. அதேபோல் திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்தபோது தனது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாக புராணம் கூறுகிறது.
திருவிழாக்கள்: சித்திரை வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை தெப்ப உற்சவம், பங்குனி பிரம்மோற்சவம் போன்ற நாட்களில் சிறப்பு ஆராதனைகள், சுவாமி வீதியுலா நடைபெறும். மோட்சம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
அமைவிடம்: நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பணகுடியிலிருந்து 15 கிமீ தொலைவிலும், வள்ளியூரிலிருந்து 12 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.