ஆன்மிகம்

ஆன்மிக சுற்றுலா: வடக்கிலும் ஒரு ரங்கன்

பிருந்தா கணேசன்

பிருந்தாவனத்தில் இருக்கும் ரங்ஜி மந்திர் எனப்படும் ரங்கமன்னார் ஆலயத்தினுள் சென்றால் நிச்சயம் இது வேறு மாநிலம் என்பது மறந்துவிடும். அப்படியே தென்னிந்தியக் கோவிலின் மறு வடிவம். மூலவரின் பெயர் கோதா ரெங்கமன்னார் . கோதா என்றால் கோதை அதாவது ஆண்டாள். பிருந்தாவனிலேயே பெரிய கோவில் இதுதான். அகலமும் நீளமுமாகப் பெரிய பெரிய சுவர்கள் (வெளிச் சுவர் 773 அடி நீளம் 440 அடி அகலம்). சுவரின் மேல் ஆங்காங்கே கருடனின் பிரதிமைகள்.

திராவிடக் கோயில் கலை

வெளியே நிற்பது சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்திலான தேர். சித்திரை மாதம் நடைபெறும் 10 நாள் உற்சவத்தின் போது அலங்கரிக்கப்பட்டு வலம் வரும். கல்லினால் ஆன பெரிய மண்டபம் போன்ற நுழைவாயில். இரண்டு அடுக்குடன் வளைவுகளைக் கொண்டு ஜெய்ப்பூர் பாணியில் கட்டப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தவுடன் நமக்குத் தெரிவது ஏழடுக்குக் கோபுரம். அதேபோன்று கிழக்கிலும் கோபுரம் உள்ளது.

இடது பக்கம் திரும்பினால் அகன்ற பாதை. இதுதான் மிகப் பெரிய வெளிச் சுற்று. ஒரு பக்கம் அடுத்த சுற்றாலையின் பெரிய மதில் சுவர்கள். மற்ற பக்கத்தில் அர்ச்சகர்களின் குடில்கள். அப்படியே தொடர்ந்தால் புஷ்கரிணி என்ற தடாகம். இதில்தான் கஜேந்திர மோட்சம் நடைபெறும். குளத்தின் அருகேயே அனுமனின் கோவில். மற்றும் பாரா துவாரி எனப்படும் 12 கால் மண்டபம். இதிலிருந்து பார்த்தால் கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் மூலவரின் தரிசனம் கிடைக்கும். அதன் முன்னிருக்கும் வாயில் வழியாக வந்தால் ஊருக்கே மணி காட்டும் மணிக்கூண்டு.

இதன் வழியாக உள்ளே நுழைந்தால் வருவது பொன்னாலான கொடிக்கம்பம். இந்தக் கோயிலின் முக்கிய அம்சமான இது பூமிக்கு மேலே 50 அடி உயரமும் கீழே 24 அடியும் கொண்டு மிகுந்த வேலைப்பாடுகளுடன் கண்ணைக் கவர்கிறது.

தெற்குப் பக்கத்தில் கண்ணாடி மாளிகை. சுவாமியை இதனுள் உட்கார வைக்கும்போது பல கோணங்களிலிருந்தும் அவரின் அழகைக் காணலாம். எல்லாச் சன்னிதிகளிலும் திருமண் தரித்த தமிழ் அர்ச்சகர்கள். ஆங்காங்கே நாச்சியார் பாசுரங்களும் ஒலிகின்றன.

அடுத்து ஜெகன்மோகன் மண்டபம். உள்ளே கருவறை. நடுவில் கோதா ரங்கமன்னார். கையில் ஊன்றுகோல். ரெங்கமன்னார் மாப்பிள்ளைக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். வலப்பக்கத்தில் கோதா (கோதை). இடப்பக்கம் கருடர். பிருந்தாவன் ரங்கமன்னார் சன்னிதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - ரங்கமன்னார் கோவிலை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டது. முன்னால் உற்சவ விக்ரகம். உப தெய்வங்கள். வேட்டி, புடவை போன்ற பாரம்பரிய உடையில் வந்தால்தான் அருகே சென்று சேவிக்க முடியும். இந்தக் கருவறை ஆனந்த நிலையம் என்ற பெயர் பெற்றுள்ளது. ஜெயவிஜயன் எனும் துவார பாலகர்கள் தரிசனமும் கிடைக்கும்.

வெள்ளி தோறும் பாலாபிஷேகம்

திரும்பி வந்து உள் பிராகாரத்தின் வலப் பக்கம் திரும்பினால் பரிக்ரமா அதாவது பிரதிட்சணம் தொடர்வதற்கு முன் சுதர்சனர், நரசிம்மர், வெங்கடேசர் (திருப்பதி பாலாஜி) ஆகியோரையும் தரிசனம் செய்கிறோம். வழியில் ததியோன்னம் (தயிர் சாதம் ) பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. கோவிலில் எல்லா அனுஷ்டானங்களும் பழக்க வழக்கங்களும் நம் ஊர் போலத்தான். பாலாஜிக்கு ஒவ்வொரு வெள்ளியும் பாலபிஷேகம் நடைபெறும். சன்னிதிக்கு அருகில் சந்தனம் அரைக்கப்படுகிறது.

சுற்று தொடர்கிறது. வேணுகோபாலர், ஆழ்வார்கள், சடகோபன், ராமானுஜரின் தரிசனங்கள் கிட்டுகின்றன. இந்த இடத்தைக் கடந்து சென்றால் மறுபடியும் கொடிக் கம்பத்திற்கே வந்து சேருவோம். வடக்கு மூலையில் யாக மண்டபம். வலது பக்கம் திரும்பினால் ராமானுஜக் கூடம் . சூடான அக்கார அடிசில். அரங்கனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது. இங்கு புருஷோத்தமரான ராமர், லக்ஷ்மணர், சீதையின் தரிசனம். பிறகு துளசியை வலம் வந்து சேஷசாயியின் தரிசனம். அப்படியே படியிறங்கினால் வைகுண்ட மண்டபம், வைகுண்ட துவாரம், வாகன் விஹார் எனப்படும் வாகனங்கள் அடுக்கி வைக்கப்படும் இடம்.

சுற்றிக்கொண்டு வந்தால் மறுபடியும் புஷ்கரணி. குளத்திற்கு மறு பக்கத்தில் நீரூற்றுகளுடன் கூடிய அழகிய நந்தவனம். இங்குதான் ஒவ்வொரு வெள்ளியும் ஆண்டாள் ரதத்தில் வந்து வீற்றிருப்பாள். அதே பக்கம் சென்றால் கோபாலனின் சன்னிதி. ஓவியர்களின் கூடம். இங்குள்ள அற்புதமான ஓவியங்கள் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

கோயில் உருவான வரலாறு

இந்தக் கோவில் எழுப்பப்பட்டதற்கும், ரெங்கமன்னார் பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கும் மூல காரணமானவர் ரங்க தேசிகர் என்பவராவார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்று ஞானம் அடைந்தவர். மதுரா வந்தபோது கோவர்த்தன பீடத்தின் தலைவரும் வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவருமான ஸ்ரீநிவாஸாச்சார்யார் என்பவரிடம் மேற்கொண்டு கற்று வைதீக சனாதன தர்மத்தைப் போதித்தார். பின் பீடத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

அவருடைய அறிவின் விசாலத்தைக் கேள்விப்பட்டு லட்சுமி சந்த், ராதா கிருஷ்ணன், கோவிந்த தாஸ் என்ற பெரும் செல்வந்தர்கள் அவரிடம் சீடர்களாகச் சேர்ந்து தங்கள் செல்வம் முழுவதையும் அவருடைய கால்களில் சமர்ப்பித்தனர். அவர்களை அரங்கனின் கோவிலுக்கு அழைத்துச் சென்ற ரங்க தேசிகர், அது போன்ற கோவில் விரஜ பூமியிலும் வர வேண்டுமென்ற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார். அவர்களும் மகிழ்ச்சியோடு இசைந்து அந்த வேலையில் தங்களை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டனர்.

கோவில் கட்டும் பணி 1845-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1851-ல் முற்றுப் பெற்றது. தோத்தாத்ரி சுவாமிஜி என்பவரின் மேற்பார்வையில் நடந்தது. ரங்க மன்னார் உள்பட அனைத்து தெய்வங்களுடைய சிலைகளும் நிறுவப்பட்டன. இங்கே பஞ்சரத்ர ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. ஆகம சாஸ்திரங்களின்படி பூஜைகள் நடைபெறுவதால் இதுவும் ஒரு திவ்ய தேசம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு வைஷ்ணவக் கடவுள்களைத் தவிர ராமானுஜர் போன்ற குருமார்களின் சன்நிதிகளும் உள்ளன.

ஆண்டாளின் உள்ளக் கிடக்கை

ஆண்டாள் , நாச்சியார் திருமொழியில் (143 பசுரங்கள்) தன்னுடைய வாழ்வை பிருந்தாவனில் கிருஷ்ணனுடைய பாதாரவிந்தங்களில் செலவழிக்க வேண்டுமென்ற உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகிறாள். இது ரங்க தேசிகர், 19-ம் நூற்றாண்டில் கோதா - ரங்கமன்னாருக்குக் கோவில் கட்டியதன் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் வடக்கு, தெற்கு மரபுகளின் விந்தையான கலவையைக் காணலாம். தெற்கின் வைணவக் கோயில்களில் நடைபெறும் விழாக்களுடன் வடக்கின் வைபவங்களும் கொண்டாடப்படுகின்றன. உதாரணத்திற்கு, பிரம்மோத்சவத்தின்போது (பங்குனி - சித்திரை) ஹோலியும் இங்கு விமரிசையாக நடைபெறும்.

SCROLL FOR NEXT