திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய மொபைல் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தினமும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையிலான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இவர்களுக்காக பல்வேறு வகை தரிசன டிக்கெட்டுகள் முந்தைய மாதத்தில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மேலும் குலுக்கல் முறை டிக்கெட் வெளியீடு, தங்கும் அறைகளுக்கான முன்பதிவும் இணைய தளத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
இனி இந்த சேவைகளை புதிய மொபைல் செயலி மூலமாகவும் பக்தர்கள் பெறலாம். மேலும் கோயிலில் பக்தர்கள் கூட்டத்தின் நிலவரம், இ-உண்டி, காணொலி சேவை டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றையும் புதிய செயலியில் பெற முடியும்.
ஏற்கெனவே ‘கோவிந்தா’ எனும் மொபைல் செயலி நடைமுறையில் இருந்தாலும் அது முழுமையாக பயன்பாட்டில் இல்லை. இந்நிலையில் ‘அப்டேட்’ செய்யப்பட்ட புதிய செயலியை தேவஸ்தானம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான பணி ஐ.டி. பிரிவில் மும்மரமாக நடைபெற்று வருகிறது.