108 வைணவ திவ்ய தேசங்களில், கேரள மாநிலம் திருக்கடிதானம் அற்புத நாராயணன் கோயில், 81-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தல பெருமாள் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய சக்தி பெறுவதாகவும், கலியுக முடிவில் ஒளியாக மாறி விண்ணில் கலந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
கடி சென்ற சொல்லைக் கொண்டு மூன்று திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. அவை திருக்கடிகை என்றழைக்கப்படும் சோளிங்கபுரம், கண்டமென்னும் கடிநகர் மற்றூம் திருக்கடித்தானம் ஆகும்.
ஒரு கடிகை நேரம் (நாழிகை - 24 நிமிடம்), இத்தலத்தில் தவம் மேற்கொண்டால், அனைத்து செயல்களில் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம். வீடுபேறு அளிக்கும் தலமாகவும் இத்தலம் கருதப்படுகிறது. கோட்டயத்தில் இருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ள இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
கோயில் கொண்டான் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம்
கோயில் கொண்ட குடக் கூத்த அம்மானே.
மூலவர் : அற்புத நாராயணன் (அம்ருத நாராயணன்) | தாயார் : கற்பகவல்லி நாச்சியார் | தீர்த்தம் : பூமி தீர்த்தம் | விமானம் : புண்யகோடி விமானம்
தல வரலாறு: முன்பொரு காலத்தில் சூரிய வம்ச அரசர், ருக்மாந்தன் திருக்கொடித்தான பகுதியை ஆண்டு வந்தார். இவரது நந்தவனத்தில் பூக்கும் மலர்களை, தேவர்கள் பறித்து பெருமாளுக்கு அணிவித்தனர். தினமும் மலர்கள் காணாமல் போவதை அறிந்த காவலர்கள் இதுகுறித்து அரசரிடம் தெரிவித்தனர். உடனே அரசன் அவர்களிடம், மலர்களைப் பறிப்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.
மறுநாள் மலர்களைப் பறிக்க தேவர்கள் வந்ததும், அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மன்னர் முன் நிறுத்தப்பட்டபோது, உண்மையறிந்த அரசர் அவர்களிடம் மன்னிப்பு கோரி அவர்களை விடுவித்தார். இருப்பினும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள், தங்கள் வலிமையை இழந்து வானுலகம் செல்ல முடியாமல் போனது.
தேவர்கள் மீண்டும் வானுலகம் செல்ல என்ன வழி என்று மன்னர் அவர்களைக் கேட்டார். அதற்கு தேவர்கள், “நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால், நாங்கள் வானுலகம் செல்ல முடியும்” என்று பதிலளித்தனர். இதைக் கேட்டதும் மன்னர் தேவர்களை அழைத்துக் கொண்டு, இக்கோயிலுக்கு வந்து பெருமாள் முன்னிலையில் தனது ஏகாதசி விரத பலனை அவர்களுக்கு தானமாக அளித்தார்.
இச்சம்பவங்கள் அனைத்தும் ஒரு கடிகை நேரத்துக்குள் நடைபெற்றதால், இத்தலத்துக்கு ‘திருக்கடித்தானம்’ என்ற பெயர் கிட்டியது.
அற்புத நாராயணன்: பஞ்ச பாண்டவர்களுள் ஒருவரான சகாதேவன் இத்தலத்தில் பெருமாளை பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. பஞ்ச பாண்டவர்களுள், தருமர், பீமன், நகுலன், அர்ஜுனன் தங்களுக்கு இஷ்ட பெருமாளை பிரதிஷ்டை செய்தபோது, இத்தலத்தில் பெருமாளை பிரதிஷ்டை செய்ய, சகாதேவன் விக்கிரகம் கிடைக்காமல் தவித்தார். அப்போது மனம் நொந்த நிலையில் அக்னிப் பிரவேசம் செய்யத் துணிந்தார்.
உடனே அந்த இடத்தில் பெருமாளின் சிலை தோன்றியதும், சகாதேவன் மகிழ்ச்சி அடைந்தார். அதனால் இத்தல பெருமாள் ‘அற்புத நாராயணன்’ என்று அழைக்கப்படுகிறார். சகாதேவன் கட்டிய கோயில் என்றே பக்தர்களால் இத்தலம் அறியப்படுகிறது.
கோயில் அமைப்பும் சிறப்பும்: புண்யகோடி விமானத்தின் கீழ் உள்ள வட்ட வடிவ கருவறையில் மூலவர் அற்புத நாராயணன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவர் அருகே நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரங்கள் உள்ளன.
கருவறையின் தெற்குப்பகுதியில் தட்சிணாமூர்த்தியும் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். இருவர் சந்நிதியில் கதவுகள் கிடையாது. சிறிய ஜன்னல் மூலமாகத்தான் இவர்களை பக்தர்கள் தரிசிக்க முடியும்.
நரசிம்மரின் உக்கிரத்தைக் குறைக்க பால் பாயாசம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. நரசிம்மருக்கு பூஜைகள் நடைபெறும்போது ‘நாராயணீயம்’ சொல்லப்படுகிறது.
கற்பகவல்லி நாச்சியார் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். கிருஷ்ணர், சந்திரன் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. கிருஷ்ணர் சந்நிதியை சகாதேவன் கட்டி முடித்ததாகக் கூறப்படுகிறது.
நினைத்த நேரத்தில் முக்தி அருளும் தலமாக இத்தலம் விளங்குகிறது. கோயில் மதில் சுவற்றில் உள்ள கல்வெட்டில் வட்டெழுத்து நிலையில் தமிழ்மொழி உள்ளது. இதன்மூலம் இத்தலம் மிகவும் பழமைவாய்ந்த தலம் என்பதை அறியலாம்.
கோயிலைச் சுற்றி வரும்போது சிதிலமடைந்த மண்டபம் காணப்படுகிறது. வெளிப்புற வாயிற் கதவருகே சுவர்ச் சிற்பங்களில் பெண்கள் குடைபிடித்து நடனமிடுதல் போன்ற காட்சிகள் அமையப் பெற்றுள்ளன.
சங்கேதம்: கார்த்திகைத் திருவிழாவின்போது 9-ம் நாளில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சிக்கு சங்கேதம் என்று பெயர். இந்த தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும். இந்த நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்காண பக்தர்கள் கூடுவது வழக்கம்.
ஒருசமயம், சிவபெருமான் இத்தலத்தில் தீப்பிழம்பாகத் தோன்றினார். அதிக வெப்பத்தால் இப்பகுதி அழிந்துவிடக் கூடாது என்று பிரம்மதேவரும், திருமாலும் சிவபெருமானிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் சிறிய தீபமாக மாறி அருள்புரிந்தார். இச்சம்பவம் திருக்கார்த்திகை தினத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
கோயில் முன் மனித உடல்: கோயிலில் உள்ள கோட்டைச் சுவர்கள் பூதங்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இக்கோயில் முன்னர் ஒரு மனிதனின் உடல் ஒரு கல்லின்மீது வைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளது. ஒருசமயம் இப்பகுதியை ஆட்சி புரிந்த அரசர், சுவாமி தரிசனம் செய்ய இக்கோயிலுக்கு வந்துள்ளார்.
அப்போது நடை சாத்தப்பட்டுவிட்ட நிலையில், ராஜாவிடம், பணம் வாங்கிக் கொண்டு, நடையைத் திறந்து, சுவாமி தரிசனம் செய்ய ராஜாவை, மெய்க்காப்பாளர் அனுமதித்துவிட்டார். இதற்கு தண்டனையாக, அந்த மெய்க்காப்பாளரின் உடல், கோயில் வாசல் முன் வைக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்: கோகுலாஷ்டமி, கார்த்திகை தீபத் திருவிழா (10 நாள்), வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.