ஆன்மிகம்

1,400 கோயில்கள் கட்டும் ஜெகன் அரசின் திட்டத்துக்கு திருப்பதி தேவஸ்தானம் உதவி

என்.மகேஷ்குமார்

அமராவதி: ஆந்திரா முழுவதும் சுமார் 1,400 கோயில்கள் கட்ட ஜெகன்மோகன் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானமும் உதவ முன்வந்துள்ளது.

இது தொடர்பாக ஆந்திர துணை முதல்வரும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருமான கே. சத்தியநாராயணா நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் பின்தங்கிய வகுப்பினர், மீனவர்கள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் 1,060 இந்து கோயில்கள் கட்ட ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது. இதுதவிர மேலும் 330 கோயில்கள் கட்டித்தர ஆர்எஸ்எஸ் அமைப்பின் சமரசதசேவா அறக்கட்டளை முன்வந்துள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் அனைத்து கோயில்களையும் கட்டி முடிக்க வேண்டும் என முதல்வர் ஜெகன் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு கோயிலுக்கும் ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதில் ரூ. 8 லட்சம் கோயில் கட்டவும், மீதமுள்ள ரூ. 2 லட்சம் கோயில் சிலைகளுக்காகவும் செலவிடப்படும்.

இதில் வெங்கடேஸ்வர் கோயில்களில் சிலைகளுக்கு ஆகும் செலவை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்க முன்வந்துள்ளது. மற்ற கோயில்களுக்கு சிலைக்கு ஆகும் செலவில் 25 சதவீதம் திருப்பதி தேவஸ்தானம் ஏற்பதாக கூறியுள்ளது.

அரசு கொடுக்கும் நிதியை விட கூடுதலாக செலவிட உள்ளூர் பக்தர்கள் முன்வந்தால் அவர்களிடம் கோயில் திருப்பணிகள் ஒப்படைக்கப்படும். ஆனால் இந்து சமய அறநிலைத் துறை வழங்கும் திட்ட வரைபடத்தில் இருப்பதுபோல் மட்டுமே கோயில் கட்டப்பட வேண்டும். இவ்வாறு துணை முதல்வர் கே. சத்தியநாராயணா கூறினார்.

SCROLL FOR NEXT