ஒரு நாள் இனிய பொழுதில் வீசிய காற்றில் ஆயிரம் இதழ் தாமரை ஒன்று வந்து விழுந்தது. பாஞ்சாலிக்கு அருகில் விழுந்த அந்த மலரின் அழகிலும், மணத்திலும் மனம் பறிகொடுத்த அவள், அதுபோன்ற மலர்கள் இன்னும் வேண்டுமென்றாள் பீமனிடம். காற்றின் வேகத்தோடு விரைந்தான். காட்டில் இருந்த மிருகங்களெல்லாம் தலைதெறிக்க ஓடி ஒளிந்தன. பீமனின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார் சிரஞ்சீவி ஆஞ்சநேயர். தம்பி வருவதும், அவன் எதற்காக வருகிறான் என்று எல்லாமும் தெரிந்து அவனுக்கு வழிகாட்டவும், வரவிருக்கும் ஆபத்துக்களைப் போக்கித் தனது ஆசிகளை முழுமையாக வழங்கவுமாய், வழிக்குக் குறுக்கே, பெரிய உருவமெடுத்துப் படுத்தார்.
அவசரமாய்ப் போய்க் கொண்டிருந்த பீமனுக்கு, இது பெரிய எரிச்சலைக் கிளப்பியது. ஏய், கிழக்குரங்கே வழிவிடு என்றான். மெல்லக் கண் திறந்த அனுமன், நானோ உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன் என்னை எதற்காகத் தொந்தரவு செய்கிறாய் என்றார் மெல்லிய குரலில். “ஓஹோ உடம்பு சரியில்லையென்றால் இப்படித்தான் நடுவழியில் படுத்துக்கொள்வார்களோ!” என்று எகத்தாளத்தோடு கேட்டான் பீமன்.
“நடக்க முடியாமல்தானே இப்படி நடு வழியில் விழுந்து கிடக்கிறேன். முடிந்தால் தூக்கி ஓரத்தில் போட்டு விட்டுப் போ! இல்லையெனில் தாண்டிப் போ!” என்றார் அனுமன்.
“ஆஹா! எனது அண்ணன் அனுமார், கடல் தாண்டித்தாவி இலங்கை போனது போலவா? என்னாலும் அவரைப் போலக் கடலைத் தாண்டிப் போக முடியும். நானும் அவருக்கு இணையான பலசாலிதான் புரிந்ததா? உன்னைத் தாண்டுவது என்ன பெரிய விஷயமா?” என்றான் பீமன்.
போனால் போகிறது, மெல்ல வழிவிடலாம் என்றிருந்த ஆஞ்சநேயர், இவனுக்குச் சிறிது பாடம் புகட்டித்தான் அருள் செய்ய வேண்டும் என்று முடிவுவெடுத்து, யாரது அனுமார்! கடலைத் தாண்டினாரா? என்று கேட்டபடியே, உடம்பைக் குறுக்கினார். ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டு மெல்ல நகர்ந்து ஒடுங்கி உட்கார்ந்து, வாலைத் தூக்கி வழி நடுவில் போட்டார். “தம்பி! வாலைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டு நீ போகலாம்” என்றார்.
இதையெல்லாம் பார்த்த பீமனுக்குக் கோபம் பொங்கியது. பலமாகச் சிரித்தான். “மாயக்காரக் குரங்கே... நீ ஏதோ திட்டத்தோடுதான் வந்திருக்கிறாய். பெருத்தும், சிறுத்தும், என்ன! வித்தை காட்டுகிறாயா? உன் மாயமெல்லாம் என்னிடம் பலிக்காது புரிகிறதா” என்றபடியே அருகே வந்து தனது கதாயுதத்தை வைத்து வாலை நகர்த்தினான். வால் நகர மறுக்கத் துணுக்குற்று மேலும் கொஞ்சம் பலம் சேர்த்துத் தள்ளினான். சுற்றிச் சுற்றி வந்தான். முடிவில் பணிந்தான். ஐயா! நீங்கள் யார்? என்றான்.
“கடல், இலங்கை, அண்ணா அது! இது! என்று ஏதோ சொன்னாயேப்பா! அந்த அண்ணா நான்தான்” என்றார் அனுமார்.
விஸ்வரூபம் காட்டிய ஆஞ்சனேயர்
அண்ணனும் தம்பியும் ஆரத்தழுவிக் கொண்டார்கள். ஆனந்தக்கண்ணீர் பெருகி வழிந்து, தோள்கள் வழியும், மார்பின் வழியும் இறங்கி ஓடியது. பீமனது வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்குச் செல்ல, கடல் தாண்டும்போது எழுந்த பெரிய உருவத்தை, விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியருளினார். பின் அவன் போகும் திசை தவறு என்று கூறிச் சரியான வழியைக் காட்டியதோடு, அவனது ஆபத்தற்ற எதிர்காலத்திற்கும் வெற்றிகளுக்கும் மட்டுமல்லாமல் மற்ற நால்வருக்குமாகவும், தான் என்றும் துணையிருப்பேன் என்று ஆசி வழங்கி வழியனுப்பி வைத்தார் ஆஞ்சநேயர்.
இந்த அழகிய சிற்பமும், அதே திருக்குறுங்குடியில்தான் உள்ளது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பீமனின் உடல் தோற்றம். இதுதான் சரியான தோற்றம். இன்று சினிமாக்களிலும், சித்திரங்களிலும் காட்டப்படுவது போல் அவனொன்றும் குண்டோதரனில்லை. பெருத்த வயிறுடன் அவன் இருக்கவே மாட்டான். அவன் மாவீரன். (இன்றைய சிக்ஸ் பேக் போன்று) ஓநாய் போன்று ஒட்டிய வயிறு உடையவன் என்ற பொருளில் அவனுக்கு சமஸ்கிருதத்தில் ‘விருகோதரன்’ என்ற பெயரே உண்டு. வருங்காலச் சிற்பிகள் இதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்.
(அடுத்த வாரம்… )
ஓவியர் பத்மவாசன்