ஆன்மிகம்

108 வைணவ திவ்ய தேச உலா - 69 | பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோயில்

செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தராகண்ட் மாநிலத்தில் சுமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோயில் 69-வது கோயிலாகப் போற்றப்படுகிறது. அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள இக்கோயில், இமயமலையின் குளிர் காரணமாக வருடத்தில் 6 மாதங்கள் (ஏப்ரல் கடைசி முதல் நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். இத்தலத்தை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமங்கையாழ்வார் பாசுரம்:

முற்ற முத்து கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து

இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையாமுன்

பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை

வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே.

மூலவர் : பத்ரிநாராயணர் | தாயார் : அரவிந்தவல்லி | தல விருட்சம் : பத்ரி விருட்சம், இலந்தை மரம் | தீர்த்தம் : தப்த குண்டம்

தல வரலாறு: சிவபெருமான் போல பிரம்மதேவருக்கும் ஐந்து தலைகள் இருந்ததால், பார்வதி தேவி, தனக்கு குழப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார். உடனே சிவபெருமான், பிரம்மதேவரின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்துவிட்டார். இதனால் சிவபெருமானை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. மேலும் பிரம்மதேவரின் தலை, சிவபெருமான் கைகளில் ஒட்டிக் கொண்டது. இதுகுறித்து திருமாலிடம் முறையிட்டார் சிவபெருமான். பூலோகம் சென்று பதிவிரதை ஒருவரிடம் யாசகம் பெற்றால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று சிவபெருமானுக்கு திருமால் ஆலோசனை வழங்கினார். அதன்படி சிவபெருமான் பூலோகத்துக்கு வந்தார். அந்த சமயத்தில் பத்ரிகாச்ரமத்தில் தாரக மந்திரத்தை நாராயணர், மனிதர் ஒருவருக்கு உபதேசித்து கொண்டிருந்தார். அருகில் மகாலட்சுமி அமர்ந்திருந்தார்.

சிவபெருமான் மகாலட்சுமியிடம் யாசகம் கேட்க, மகாலட்சுமியும் உணவு அளித்தார். அதே நேரம், பிரம்மதேவரின் கபாலம் சிவபெருமான் கையில் இருந்து கீழே விழுந்தது. அதனால் இத்தலத்தில் பித்ருக்களுக்கு பிண்டம் இடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஆத்ம (நமக்கு நாமே) பிண்டமும் இட்டுக் கொள்ளலாம்.

கோயில் அமைப்பும், சிறப்பும்: பத்ரி நாராயணர் கோயில் கடல் மட்டத்தில் இருந்து 10,248 அடி உயரத்தில் உள்ளது. மிகுந்த குளிர்ந்த பகுதி என்பதால் 6 மாதம் மட்டுமே நடை திறந்திருக்கும். நடை மூடப்பட்டிருக்கும் சமயம் (மார்கழி முதல் சித்திரை வரை) தேவர்கள் மட்டுமே தங்கியிருந்து பத்ரி நாராயணரை (பத்ரி விஷால்) தரிசிப்பதாக ஐதீகம்.

கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கும் மூலவர் பத்ரி நாராயணர் கருப்பு நிற சாளகிராமத்தால் ஆனவர். இடது கையில் சங்கும், வலது கரத்தில் சக்கரமும், மற்ற இரு கரங்களையும் இணைத்து யோக முத்திரை, அபய வரதம் காட்டி அருள்பாலிக்கிறார்.

மகாலட்சுமியை மணம் முடிப்பதற்காக பெருமாள், குபேரனை அழைத்து மிகவும் ஆடம்பரமான முறையில் திருமண ஏற்பாடுகளை செய்தார் என்று கூறப்படுகிறது. திருமணம் கைகூடாதவர்கள், இக்கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது.

ஆதிசங்கரர், இந்து மதத்தைப் பரப்ப தெற்கே சிருங்கேரியிலும், வடக்கே பத்ரிநாத்திலும் கிழக்கே பூரியிலும், மேற்கே துவாரகையிலும் சிருங்கேரி மடங்கள் நிறுவினார். அதனால் இங்குள்ள சிருங்கேரி மடம் முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப்படுகிறது.

தீபாவளியை முன்னிட்டு போதுமான அளவு நெய் விட்டு விளக்கேற்றிய பிறகு, வருடந்தோறும் கோயில் மூடப்படும். மே மாதத்தில் கோயில் மீண்டும் திறக்கப்படும்போது இந்த தீபம் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்பது தனிச்சிறப்பு.

குபேரன் சந்நிதி: பத்ரி நாராயணருக்கு திருமண ஏற்பாடுகளுக்கு நிதி அளித்த குபேரன், பத்ரி நாராயணர் கோயிலில் இருந்து 9 மைல் தொலைவில் உள்ள அளகாபுரி பட்டணத்தில் வசிப்பதால், அதை நினைவுபடுத்தும் வகையில் குபேரனுக்கு இங்கு சந்நிதி உள்ளது. இங்குள்ள அலக்நந்தா நதி, குபேரப்பட்டணத்தில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த நதி, தேவப்ரயாக்கில் பாகீரதி நதியுடன் இணைந்து கங்கை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நந்தவனம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத்தில் திருமந்திரம் அவதரித்ததாகக் கூறப்படுகிறது.

ஐந்து தீர்த்தம்: பத்ரி நாராயணர் கோயிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. தப்த குண்டம், நாரத குண்டம், கூர்ம தாரா, பிரகலாத தாரா, ரிஷிகங்கர் ஆகியவற்றில் கூர்மதாரா தீர்த்தம் அன்னதானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. தப்த குண்டத்தில் நீராடிய பின்னர் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

தப்த குண்டத்தில் வெந்நீர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமாக நெய் உண்டதால், அக்னி பகவான் அஜீரணக் கோளாறால் அவதியுற்றார். உடனே தன் பிரச்சினையைத் தீர்க்குமாறு திருமாலை நோக்கி தவம் புரிந்தார் அக்னி பகவான். இதைத் தொடர்ந்து திருமால் அவரை நீர் வடிவில் பிரவேசிக்கச் செய்து, அதில் பக்தர்கள் நீராடினால் அவர்கள் பாவம் தீர்ந்துவிடும் என்றும், அக்னி பகவானின் அஜீரணக் கோளாறும் சரியாகும் என்றும் தெரிவித்தார். அன்றைய தினம் முதல் அக்னி பகவான் பத்ரி நாராயணரின் திருவடியில் இருந்து நீர்த்தாரையாக பிரவேசித்து, தப்த குண்டத்தில் இருந்து விழுந்து சிதள குண்டத்தை அடைகிறது. வெந்நீரைக் கொண்ட இக்குண்டத்துக்கு அருகில் உடல் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு குளிர்ச்சி பொருந்திய நீரைத் கொண்டு அலக்நந்தா நதி பெருக்கெடுத்து ஓடுகிறது.

உத்தவரும் பத்ரிநாத்தும்" கிருஷ்ணாவதாரம் முடிந்ததும் கிருஷ்ண பரமாத்மா வைகுண்டம் கிளம்ப ஆயத்தமானார். அவரது அமைச்சரும், நண்பருமான உத்தவருக்கு அவருடன் வைகுண்டம் செல்ல வேண்டும் என்று விருப்பம். அவரது விருப்பத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தார் உத்தவர். உடனே கிருஷ்ணர் உத்தவருக்காக உத்தவகீதையை அருளினார். பின்னர் உத்தவரிடம், “உன் வாழ்நாள் முடிந்ததும் வைகுண்டம் வரலாம். அதுவரை உனது வாழ்நாள் முழுவதும் பதரிகாசிரமத்தில் தங்கி இறைவனை தியானித்துக் கொண்டு இருந்தால், தக்க சமயத்தில் என்னை வந்தடைவாய்” என்று திருவாய் மலர்ந்தார். அதன்படி உத்தவர் பத்ரிநாத்தில் தங்கியிருந்து வாழ்நாள் முடிந்த பின்னர் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார்.

திருவிழாக்கள்: கிருஷ்ண ஜெயந்தி, பத்ரி கேதார் திருவிழா (ஜூன் மாதம் - 8 நாட்கள்) சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

SCROLL FOR NEXT