திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று (24-ம் தேதி) இரவு தொடங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 17 நாட்கள் நடைபெறும் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று (24-ம் தேதி) இரவு தொடங்கியது. இதையொட்டி, சின்ன கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர், சந்தன காப்பு அலங்காரம் மாலையில் நடைபெற்றது. இதையடுத்து உற்சவரான அம்மன், காமதேனு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். துர்க்கை அம்மனுக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, பிடாரி அம்மன் உற்சவம் இன்று (25-ம் தேதி) இரவு நடைபெற உள்ளது. அண்ணாமலையார் கோயிலில் தங்க கொடி மரம் அருகே உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றதும், பிடாரி அம்மனின் உற்சவம், மாட வீதியில் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து, நாளை (26-ம் தேதி) விநாயகர் உற்சவம் நடைபெற இருக்கிறது. துர்க்கை அம்மன் உற்சவத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிப்பட்டனர்.