ஆன்மிகம்

உங்களிடமிருந்தே எல்லாம் துவங்குகிறது

ராபர்ட் ஆடம்ஸ்

“நான் ஆன்மிக ரீதியான முன்னேற்றத்தை அடைகிறேன் என்பதை எப்படி விளங்கிக்கொள்வது? அதற்கென்று ஏதாவது அறிகுறி இருக்கிறதா?” இந்தக் கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு.

அதற்கான பதில் மிகவும் எளிமையானது. நீ உலகைக் காணும்போது எதைப் பார்க்கிறாய்?

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த அதே உலகத்தையா பார்க்கிறாய்? உனது பழக்கங்களில் ஏதும் மாறவேயில்லையா; உனது தீர்ப்பு மனோபாவம் மாறவில்லையா; உனது அகந்தை மாறவில்லையா; உனது கோபம் மாறவில்லையா. அப்படியெனில் நீ எதையுமே செய்யவில்லை என்றே பொருள். எதையுமே பயிலாமல் உங்களுக்கு வெளியே உள்ள பொருட்களையும் உங்களைப் பார்ப்பது போலவே பார்க்கிறீர்களா?

ஆனால், வெளியே சச்சரவுகள் நடந்துகொண்டிருக்கும் போதும், நீங்கள் அமைதியையும் மேலும் இசைமையையும் கூடுதலான அமைதியையும் இசைமையையும் உணர்கிறீர்களா? யார் மீதும் எதன் மீதும் தீர்ப்பு மனநிலை இல்லாமல் இருக்கிறீர்களா? சரியோ தவறோ, நல்லதோ தீயதோ, ஏற்றமோ இறக்கமோ, முன்னேற்றமோ பின்னடவோ எல்லாமே மாயத் தோற்றங்களாகத் தெரிகிறதா? தற்போது நீங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள். ஆம்! சரியாகத்தான் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது. அப்போதுதான் உங்களால் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

இன்னும் எத்தனை காலம் இந்த உலகத்தில் இருப்பீர்கள் என்றோ உங்கள் உடலுடன் இருப்பீர்கள் என்றோ உங்களுக்குத் தெரியாது என்பதை நினைவில் நிறுத்துங்கள். உங்களுக்கு அளிக்கப்பட்ட அவகாசத்தில் என்ன செய்யப் போகிறீர்கள்? அபத்தமான விஷயங்களுக்காகக் கவலைப்பட்டு உங்கள் காலத்தை வீண்டிக்கப் போகிறீர்களா? யாரையாவது, எதையாவது மாற்றி உங்கள் வழிக்குக் கொண்டுவருவதில் உங்கள் காலத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் உங்களைத் தான் முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆன்மிக முன்னேற்றத்தை அடைவதற்கு விரும்பினால் இந்த உலகத்தை அதன் போக்கிலிருக்க விடுங்கள்.

இந்த உலகை அதன் போக்கில் விடுவதென்று நான் சொல்வது, எல்லாரையும் புறக்கணித்துக் குகைக்குப் போய் நாம் வாழ வேண்டுமென்பதாக இல்லை. மனதளவில் சரி செய்தால் போதும்.

இந்த உலகில் நிலவும் முரண்பாடுகள், மனிதன் சகமனிதனுக்கு இழைக்கும் அநீதி, போர்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது, அந்த நிலைமைகள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்வதன் மூலம் மனதளவில் மாற்றுங்கள். பிரம்மம் ஒன்றே; ஒரே முழுமையான மெய்மை தான் உள்ளது. அந்த முழுமையான மெய்மை நீங்கள்தான்.

ஒவ்வொரு நாளும் இப்படி மனதளவில் திருத்தங்களைச் செய்துவந்தால், நீங்கள் அதைச் செய்யவே வேண்டாத ஒரு நாள் வரும். அப்போது நீங்கள் முரண்பாடுகள் இல்லாத, குழப்பங்கள், குழப்படிகள் இல்லாத உயர்ந்த பிரக்ஞை நிலையில் இருப்பீர்கள். முரண்பாடுகள், குழப்பங்கள், குழப்படிகள் இல்லாத நிலை என்று நான் சொல்வதால் உலகம் அப்படியாக மாறிவிடும் என்று கூறவில்லை. இந்த உலகம் மாறவே மாறாது, நாம் பார்க்கும் உலகம்தான் இந்த உலகம்.

உலகம் குறிப்பிட்ட பிரபஞ்ச கர்மத்தில் இயங்கிக்கொண்டி ருக்கிறது. அதற்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நீங்கள் மனிதர்களை அவரவர் வழியில் வாழவிடக் கற்றுக்கொண்டீர்கள். உங்களிடமிருந்தே எல்லாம் துவங்குகிறது.

நீங்கள் உங்களுடன் திருப்திகரமாக இல்லையெனில், நீங்கள் உங்களை விரும்பவில்லையெனில், உங்களால் எப்படி மற்றவர்களை நேசிக்க முடியும்? மற்றவர்களிடம் எப்படி திருப்தியுடன் இருத்தல் சாத்தியம்? நீங்கள் தவறைக் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருப்பீர்கள். அது உங்களது ஆழ்ந்த அதிருப்தியிலிருந்து வருகிறது;

இதற்கு என்ன நிவாரணம் காணப்போகிறீர்கள்? கடவுகளின் மீது, பிரம்மத்தின் மீது, பேருணர்வின் மீது மேலான பிரக்ஞையின் மீது மனதை வைப்பதன் மூலம் நிவாரணம் காணலாம்.

(ராபர்ட் ஆடம்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த அத்வைத ஆசிரியர், ரமண மகரிஷியின் சீடர்)
தமிழில்: ஷங்கர்

SCROLL FOR NEXT