ஆன்மிகம்

108 வைணவ திவ்ய தேச உலா - 61.திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோயில்

செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேசங்களில், செங்கை மாவட்டம் திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோயில், 61-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. ஒரே தலத்தில் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான், பெருமாளின் நான்கு கோல தரிசனத்தைக் காண கண் கோடி வேண்டும். இத்தலத்தில் நரசிம்மர் பால நரசிம்மராக அருள்பாலிக்கிறார்.

மூலவர் : நீர்வண்ணர், ரங்கநாதர், உலகலந்த பெருமாள், பால நரசிம்மர்

தாயார் : அணிமாமலர் மங்கை, ரங்கநாயகி

தல விருட்சம் : வெப்பால மரம்

தீர்த்தம் : சித்த, சொர்ண, காருண்ய தீர்த்தம், ஷீர புஷ்கரிணி

ஆகமம் : வைகானஸம்

விமானம் : தோயகிரி

திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமங்கையாழ்வார் பாசுரம்:

அன்றாயர் குலக்கொடியோடு அணிமா

மலர் மங்கையோடு அன்பளவி, அவுணர்க்கு

என்றாலும் இரக்கம் இல்லாதவனுக்கு

உறையும் இடமாவது, இரும்பொழில் சூழ்

நன்றாய புனல் நறையூர் திருவாலி

குடந்தை தடந்திகழ் கோவல் நகர்

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தார்க்கு

இடம் மாமலையாவது நீர்மலையே.

தல வரலாறு: பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் ஸ்ரீரங்கத்தில் பெருமாளின் சயன கோலத்தை தரிசித்த பிறகு, திருநீர்மலை வழியே அவரவர் இருப்பிடத்துக்குச் சென்று கொண்டிருந்தனர். பெருமாளின் சயன கோலம், கண்களை விட்டு அகலாமல் இருந்ததால், இருவருக்கும் மீண்டும் அந்த தரிசனம் கிடைக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இதுகுறித்து இருவரும் திருமாலிடம் வேண்டினர். இத்தலத்திலேயே அந்த தரிசனம் கிடைக்க வேண்டும் என்று இருவரும் விரும்பியதால், திருமால், திருநீர்மலையில் போக சயனத்தில் ரங்கநாதராகக் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேய முனிவர்கள் உள்ளனர்.

கோயில் அமைப்பும், சிறப்பும்: மலையிலும், மலைக்கு கீழேயும் இரண்டு பெரிய கோயில்கள் அமைந்துள்ளன. பெருமாள் நான்கு நிலைகளில் மூன்று அவதாரக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். 3 ஏக்கர் பரப்பளவில் நடுவில் நீராழி மண்டபத்துடன் தெப்பக்குளத்துடன் கோயில் அமைந்துள்ளது. மூலவருக்கு இங்கு திருமஞ்சனம் கிடையாது. வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் மட்டும் தைலக்காப்பு செய்யப்படும். ராமபிரான் தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவருக்கு ராமபிரானை மணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால், இத்தலத்துக்கு வந்து தவம் மேற்கொண்டார். திருமால் அவருக்கு, ராமபிரானாக, சீதாபிராட்டியுடன் மணக்கோலத்தில் தரிசனம் கொடுத்தார். உடன் லட்சுமணர், பரதன், சத்ருக்கனன் ஆகியோரும் இருந்தனர். அதே கோலத்தோடு இங்கேயே கோயில் கொள்ள வேண்டும் என்று பெருமாளை, வால்மீகி வேண்டியதால், மலையடிவாரத்தில் தனிகோயிலில் அருள்பாலிக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததாலும், நீல நிற மேனி உடையவராக இருப்பதாலும், பெருமாள் ‘நீர்வண்ணப் பெருமாள்” என்றும் நீலவண்ணப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அருகே வால்மீகி முனிவர் உள்ளார்.

திருமங்கையாழ்வாருக்கு தரிசனம்: திருநீர்மலை பெருமாளை தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது மலையைச் சுற்றிலும் நீர் சூழ்ந்திருந்தது. நீர் வடிந்தபிறகு பெருமாளை தரிசிக்க வேண்டும் என்று மற்றொரு மலையில் காத்திருந்தார். பல நாட்கள் காத்திருந்த பிறகு பெருமாள் தரிசனம் கிடைத்தது. தன் மீது மிகுந்த பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள், நின்ற கோலத்தில் நீர்வண்ணப் பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் ரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாள் என்று நான்கு கோலங்கள் காட்டி அருளினார். நீர்வண்ணப் பெருமாள் மலையடிவாரக் கோயிலிலும், நரசிம்மர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோயிலிலும் அருள்பாலிக்கின்றனர்.

பால நரசிம்மர்: இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மர், மிகவும் உக்கிரமாக இருந்ததால், அவரைப் பார்த்து பிரகலாதன் பயந்தான். அவனது பயத்தைப் போக்கும்விதமாக, பெருமாள் தனது உக்கிர ரூபத்தை மாற்றி, அவனைப் போலவே ஒரு சிறுவனாக, பால நரசிம்மராக அருள்பாலித்தார். மலைக்கோயிலில் இவரது சந்நிதியில் பால நரசிம்மருக்குப் பின்புறம் நரசிம்மர் சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன், சங்கு, சக்கரம் இன்றி, இடக்கை ஆள்காட்டி விரலை உயர்த்திக் காட்டி அருள்பாலிக்கிறார்.

மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்தில் உள்ள நீர்வண்ணப் பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் கடக்கும் அழகிய மணவாளர் மாசி மகத்தில் கருட சேவை சாதிக்கிறார். நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒரு நாள் விழா நடைபெறும். அன்றைய தினம் இருவரும் அடிவாரக் கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர்.

திருவிழாக்கள்: சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர் - அணிமாமலர் மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர் - ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. தை மாத ரதசப்தமி தினத்தில் ரங்கநாதர் ஏழு வாகனங்களில் பவனி வருவதைக் காண பக்தர்கள் குவிவது வழக்கம். காலை சூரிய உதயத்துக்கு முன்னர் சூரியபிரபையில் எழுந்தருளி மாடவீதி வலம் வந்து தீர்த்தக்கரைக்கு எழுந்தருள்கிறார். சூரிய உதய வேளையில், சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதை சூரியனே பெருமாளுக்கு செய்யும் பூஜையாகக் கருதுவதுண்டு. பின்னர் சுவாமி, அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், குதிரை, சிம்ம வாகனங்கள் மற்றும் சந்திர பிரபையில் எழுந்தருளி வீதியுலா வருவது வழக்கம். சித்திரை, பங்குனி பிரம்மோற்சவங்களில் 9-ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் ஆகிய 3 நாட்களில் தீர்த்தவாரி விழா நடைபெறும். துவாதசி திதி நாட்களில் தீர்த்தவாரி நடைபெறுவதால், இந்த நிகழ்ச்சி ‘முக்கோட்டி துவாதசி’ என்று அழைக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT