ஆன்மிகம்

108 வைணவ திவ்ய தேச உலா - 60.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்

செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேசங்களில், சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 60-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது தனிச்சிறப்பு.

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஸ்ரீ ராமானுஜர் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருங்கையாழ்வார் பாசுரம்:

இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும்

இன்பன், நற்புவி தனக்கு இறைவன்

தன்துணை ஆயர் பாவை நப்பின்னை

தனக்கிறை, மற்றையோர்க் கெல்லாம்

வன்துணை, பஞ்ச பாண்டவர்க்காகி

வாயுரை தூது சென்று இயங்கும்

என்துணை எந்தை தந்தை தம்மானை

திருவல்லிக் கேணி கண்டேனே..

மூலவர் : வேங்கடகிருஷ்ணர்

உற்சவர் : பார்த்தசாரதி பெருமாள்

தாயார் : ருக்மிணி

தீர்த்தம் : கைரவிணி புஷ்கரிணி

தல விருட்சம் : மகிழம்

ஆகமம் : வைகானஸம்

விமானம் : ஆனந்த விமானம்

தல வரலாறு: சுமதிராஜன் என்ற மன்னர் திருமால் பக்தராக இருந்தார். அவருக்கு குருஷேத்ர போரில் பார்த்தனுக்கு சாரதியாக (தேரோட்டி) இருந்த கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தனது விருப்பத்தை திருமாலிடம் தெரிவிக்க, திருமாலும் அவ்வண்ணமே காட்சி கொடுத்து அருள்பாலித்தார். தான் விரும்பிய கோலத்தில் கிருஷ்ணரைக் கண்டு மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் இத்தலத்தில் கோயில் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

போரில் பார்த்தனுக்கு சாரதியாக இருந்தபோது, கிருஷ்ணர் கையில் எந்த ஆயுதமும் இல்லை. அதேபோல இத்தலத்திலும், ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி அருள்பாலிக்கிறார். பார்த்தன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகள் அனைத்தையும் தானே முன்னின்று ஏற்றுக்கொண்டு, அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்தார் கிருஷ்ணர். அப்போது கிருஷ்ணரின் முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் இருக்கும். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பார்த்தசாரதியின் முகத்திலும் வடுக்கள் காணப்படுகின்றன.

திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மை கொண்டது என்ற தத்துவத்தை அனைவரும் உணர்வதுண்டு. மூலவர் வேங்கடகிருஷ்ணராக இருந்தாலும் உற்சவர் பார்த்தசாரதி பெயரிலேயே இக்கோயில் அழைக்கப்படுகிறது.

தீர்த்த தாயார்: பிருகு மகரிஷி திருமாலை தனது மருமகனை அடைய வேண்டும் என்று விருப்பம் கொண்டு திருவல்லிக்கேணியில் தவம் இயற்றினார். அப்போது அங்கிருந்த புஷ்கரிணியில் மலர்ந்த அல்லி மலரில் தாயார் தோன்றினார். பிருகு முனிவர் குழந்தைக்கு வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். தக்க வயதில் திருமால் ரங்கநாதராக இத்தலத்துக்கு வந்திருந்து வேதவல்லித் தாயாரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருக்கல்யாண வைபவம் மாசிமாதம் வளர்பிறை துவாதசி நாளில் நடக்கிறது. வேதவல்லித் தாயார் தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார். தாயார் கோயிலை விட்டு வீதியுலா வருவதில்லை. வெள்ளிக்கிழமைகள் மற்றும் உத்திர நட்சத்திர தினங்களில் கோயில் வளாகத்துக்குள் புறப்பாடாகி ஊஞ்சல் சேவை அருள்வார்.

கோயில் அமைப்பும் சிறப்பும்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் கோபுரங்களும், மண்டபங்களும் தென்னிந்தியக் கோயில் கட்டிடக் கலைக்கே உரிய நுட்பமான சிற்பக் கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கருவறையில் மூலவர் வேங்கடகிருஷ்ணர் அருகே ருக்மிணி தாயார், மார்பில் மகாலட்சுமி, அவரது வலதுபுறத்தில் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் உள்ளனர். ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமணர், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர் ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.

பிரகாரத்தில் ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன.

வழக்கமாக மீசையுடன் தோன்றும் மூலவர், வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் மீசையில்லாமல் அருள்பாலிக்கிறார். வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்போது, உற்சவர் மீசையுடன் அருள்பாலிக்கிறார்.

பஞ்ச மூர்த்தி ஸ்தலம்: பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், பிரகாரத்தில் கஜேந்திர வரதர் மற்றும் யோக நரசிம்மர் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அதனால் இத்தலம் ஐந்து மூலவர் ஸ்தலம் அல்லது பஞ்ச மூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. ரங்கநாதர் சந்நிதியில் சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் உள்ளனர்.

யோக நரசிம்மரே இத்தலத்தில் முதல் மூர்த்தியாவார். அத்ரி மகரிஷிக்கு காட்சியளித்த நரசிம்மரான இவருக்கே காலையில் முதல் பூஜை நடைபெறுகிறது. யோக நிலையில் இவர் இருப்பதால், இவரது சந்நிதிகளில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை.

இத்தலத்தில், கஜேந்திரனுக்கு மோட்சம் அருளிய கஜேந்திர வரதர் (மூலவர்) கருடாழ்வார் மேல் நித்ய வாசம் செய்வதால், இத்தலத்தில் அனைத்து நாட்களும் கருடசேவை வைபவத்தைக் காண முடியும்.

இங்குள்ள மூலவர் திருமேனியே கீதையில் பகவானின் சொரூபம் என்று கருதப்படுகிறது. நின்றான் கோலத்துக்கு வேங்கடகிருஷ்ணர், அமர்ந்தான் கோலத்துக்கு தெள்ளியசிங்கர் என்றழைக்கப்படும் நரசிம்மர், கிடந்தான் கோலத்துக்கு மன்னாதர் என்றழைக்கப்படும் ரங்கநாதர் - இந்த மூன்று நிலைகளுமே வீரம், யோகம், போகம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்வதாக அமைந்துள்ளன.

திருவிழாக்கள்: பிப்ரவரி மாத லட்சார்ச்சனை, ஏப்ரல் மாத பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு பிறப்பு, நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவம், கோகுலாஷ்டமி உற்சவ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வருவது வழக்கம்.

நரசிம்மரை வணங்கினால் கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும். பார்த்தசாரதி பெருமாளை வேண்டினால் திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

SCROLL FOR NEXT